Oddanchatram: பழ ஈயைக் கட்டுப்படுத்த விவசாயி புது முயற்சி!

Advertisements

புடலங்காயில் அழுகல் நோயை ஏற்படுத்தும் பழ ஈயைக் கட்டுப்படுத்த ஒட்டன்சத்திரம் விவசாயி ஒருவர் எடுத்துள்ள புது முயற்சி வெற்றியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் பகுதி முழுவதும் விவசாயமே பிரதான தொழிலாக  உள்ளது. இங்கு மக்காச்சோளம், புடலை, தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம், நிலக்கடலை உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கனிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விவசாய பயிர்களைச் சேதப்படுத்தும் விதமாகப் பல்வேறு பிரச்சனைகளையும் இப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாகப் புடலங்காயை தாக்கும் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த இப்பகுதி மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட பரூமரத்துப்பட்டியைச் சேர்ந்த விவசாயி தங்கராசு தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் முருங்கையுடன் ஊடுபயிராகப் புடலங்காயை பயிர் செய்துள்ளார்.

புடலங்காயை தாக்கும் பழ ஈ இவரது தோட்டத்தில் உள்ள புடலங்காய்களை தாக்கி அவற்றில்  அழுகல் நோயை ஏற்படுத்தியபோது வேளாண்மை துறை அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று தற்பொழுது அழுகல் நோய் இல்லாத புடலங்காயை பயிரிட்டு வருகிறார். இதுகுறித்து விவசாயி தங்கராசு கூறும்பொழுது :

தனது இரண்டு ஏக்கர் நிலத்தில்  ஊடுபயிராகப் புடலங்காயை பயிரிட்டுள்ளேன். இந்தப் புடலங்காய்களில் அழுகல் நோயை ஏற்படுத்தும் பழ ஈயைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிற டப்பாவை  தொங்கவிட்டுள்ளோம். அந்த மஞ்சள் நிற டப்பாவில் ஆண் பழ ஈக்கவர்ந்திழுக்கும் வாசனை உள்ள மாத்திரை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வாசனையில் கவர்ந்திழுக்கபடும் ஆண் பழ ஈ அந்த டப்பாவிற்குள் சென்று இறந்து விடுகிறது. எனவே, இனப்பெருக்கம் செய்ய முடியாமல் பெண் பழ ஈயும் இறந்து விடுகிறது. இதனால் தற்பொழுது புடலங்காயில் அழுகல் நோய் ஏற்படுவதில்லை என்று கூறுகிறார். மேலும் சந்தைகளில் காய்கறிகளின் விலை ஏற்றம் இறக்கமாக உள்ளது, இதனால் விவசாயிகள் நிலையான வருமானத்தைப் பெற முடியவில்லை. எனவே தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல்  செய்து விலை நிர்ணயம் செய்தால் விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *