
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வருகிறதோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, சென்னையில் மீண்டும் பைக் ரேஸர்களின் அட்டகாசம் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. அதிலும் அதிர்ச்சியூட்டும் விஷயமாக, சட்டம்-ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையின் பேரிகார்டுகளுக்கே இந்த இளைஞர்கள் களங்கம் விளைவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் எப்போதும் பரபரப்பாக இயங்கக்கூடிய அடையாறு மற்றும் பெசன்ட் நகர் சாலைகளில், 5-க்கும் மேற்பட்ட பைக்குகளில் வந்த இளைஞர்கள், நடுரோட்டில் தாறுமாறாக வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். சாகசம் என்ற பெயரில் அவர்கள் செய்த காரியம், பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
சாலையில் பாதுகாப்புக்காகப் போலீசார் வைத்திருந்த பேரிகார்டுகளைத் தங்களது பைக்குகளில் கட்டிக்கொண்டு, சாலையில் நெருப்புப் பொறியும் அளவிற்கு உரசிக்கொண்டே இழுத்துச் சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சாகசங்களை இவர்களே வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவேற்றியிருப்பது, காவல்துறையின் மீது இவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது.
ரீல்ஸ்களுக்காகவும், லைக்குகளுக்காகவும் எதையும் செய்யலாம் என்ற மனநிலை, பொதுமக்களின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஏற்கனவே ஈ.சி.ஆர் (ECR) சாலைகளில் நள்ளிரவில் நடக்கும் இத்தகைய பைக் ரேஸ்களால் பல உயிர்கள் பறிபோயுள்ளன; பல குடும்பங்கள் துயரத்தில் மூழ்கியுள்ளன. இத்தனை துயரங்கள் நடந்தும், இந்த இளைஞர்களுக்கு எந்தவித அச்சமும் இல்லையா? என்ற கேள்வி சென்னை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
காவல்துறையின் அதிகாரத்தையே கேலி செய்யும் வகையில் நடந்துகொண்ட இந்த இளைஞர்களின் வீடியோ ஆதாரங்களை வைத்து, சம்பந்தப்பட்டவர்களைத் தேடும் பணியில் போக்குவரத்துப் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தங்களுக்குத் தாங்களே ஆபத்தை வரவழைத்துக் கொள்ளும் விதமாக, தாங்களாகவே வீடியோவை வெளியிட்ட அந்த இளைஞர்களுக்குத் தக்க தண்டனை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
சாலையைத் தங்களது விளையாட்டு மைதானமாக நினைக்கும் இத்தகையவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை, இனிவரும் காலங்களில் எவரும் இதுபோன்ற செயல்களைச் செய்யத் துணியாத அளவிற்கு இருக்க வேண்டும். இதுபோன்று பைக்கில் மாஸ் காட்ட வேண்டும் என்ற நோக்கில் மவுத் பீஸசாவும் பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களின் கருத்துகளைக் உள்ளிடத்தில் போடவும்..


