அடுத்த 5 வருஷத்துக்கு இதுதான் ட்ரெண்டிங்.. நேருக்கு நேர் மோதிக்கொண்ட விஜய் – உதை.!

Advertisements

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றிருக்கும் சூழலில், எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வாகியிருக்கிறார் உதயநிதி. சட்டமன்றக் கூட்டத்தொடரில் இருவருக்கும் நடந்த வார்த்தை மோதல், அடுத்தகட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. விஜய்க்கும் உதய்க்குமான `நீயா நானா யுத்தம்தான் அடுத்த ஐந்தாண்டு தமிழக அரசியலாக இருக்கப்போகிறது என்று கணிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தமிழகத்தில் இதுவரை அண்ணா – காமராஜர், கருணாநிதி – எம்.ஜி.ஆர், ஜெயலலிதா – கருணாநிதி, ஸ்டாலின் – எடப்பாடி என்றிருந்தது இரு துருவ அரசியல். தற்போது அது விஜய் – உதயநிதி என உருவெடுத்திருக்கிறது. 48 வயதான உதயநிதி எதிர்க்கட்சித் தலைவராகியிருப் பதும், 52 வயதான விஜய் முதல்வர் பொறுப்பேற்றிருப்பதும் தமிழக அரசியலை சுறுசுறுப்படைய வைத்திருக்கிறது. அவர்களே, இவர்களே என்ற அரசியலெல்லாம் மங்கத் தொடங்கி இன்ஸ்டா பாணியில் அதிரடி அரசியல் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது.

சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே விஜய்க்கும் உதய்க்கும் எதிரான மோதல் வெடித்திருக்கிறது. உங்க அப்பாவை காணோம் என ஸ்டாலினை நகையாட குட்டி ஸ்டோரி சொன்ன விஜய்க்கு பதிலடியாக, ‘செங்கல்பட்டில் கணவனைத் தேடும் மனைவியின் கதை என முதல்வரின் தனிப்பட்ட பிரச்னையை வீதிக்கு இழுத்திருக்கிறார் உதய். அதைத் தொடர்ந்து தி.மு.க முக்கியப்புள்ளிகளின் வீட்டில் ரெய்டுகள் றெக்கை கட்டிவிட்டன.

2024 பிப்ரவரில் கட்சி தொடங்கி 2024 செப்டம்பரில் கட்சிப் பணிகளைத் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் இரண்டரை ஆண்டுகளிலேயே அரியணை ஏறியிருக்கிறது. சுமார் 35 சதவிகித வாக்குகளுடன் 108 இடங்களில் வென்றது த.வெ.க. பின்னர், தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து, முதல்வராகியிருக்கிறார் விஜய். மறுபக்கம், திமுக ஆட்சியை இழந்ததோடு மட்டுமல்லாமல், ஸ்டாலினே, கொளத்தூர் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் வெற்றியைப் பறிகொடுத்தார்.

அவர் அவைக்கு வர முடியாத நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு உதயநிதியை தேடி வந்திருக்கிறது. இளைஞர்களின் எழுச்சியால் த.வெ.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் இந்தச் சூழலில், இளைஞர்கள் படையை தி.மு.க பக்கம் திருப்பும் மிகப்பெரிய பொறுப்பு உதயநிதியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தந்தையைவிடத் தீவிரமாக உழைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் உதயநிதிக்குத் தரப்பட்டிருக்கிறது.

விஜய்க்கும் உதய்க்குமான போர் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவதற்குள்ளேயே தொடங்கிவிட்டது. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி அரசியலுக்கு வந்ததிலிருந்து தன்னிச்சையாக எந்தவிதச் செயல்பாட்டையும் வெளிப்படுத்தியதே இல்லை. கட்சியின் புரோட்டோகால் படியும், தி.மு.க தலைவரின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டும்தான் செயல்பட்டுவந்தார். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த நாளிலிருந்து அவர் அவராகவே இல்லை.

த.வெ.க பதவியேற்கக் கூடாது என மே 4 இரவு முதல் மே 9 மதியம் வரை ஏகப்பட்ட காய்நகர்த்தல்களைச் செய்தார். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடியை ஆதரித்து முதல்வராக அமரவைப்போம், என்னவானாலும் விஜய் முதல்வராகக் கூடாது என்ற எத்தனிப்பு அவரிடம் தென்பட்டது. ஆனால், அந்த நகர்வுகள் கைகூடவில்லை. ‘த.வெ.க ஆட்சிக்கு 6 மாதங்கள்  கொடுப்போம் என எங்கள் தலைவர் சொன்னபோதிலும் அதை உதயநிதியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நம்பிக்கை வாக்கெடுப்பிலிருந்து சோபா மாடல் என த.வெ.க-வை வெளுத்து வாங்கத் தொடங்கிவிட்டார் உதயநிதி. நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும் பான்மையை நிரூபித்துவிட்டதால், அடுத்த தாக சபாநாயகர்மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டுவர தீவிரம் காட்டுகிறார் உதய் என்றனர். த.வெ.க ஆட்சியமைத்த பிறகு நடந்த முதல் கூட்டத்தொடரில், த.வெ.க அரசின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருந்தது உதயநிதி டீம்.

ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உரையாற்றினார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி. அவர் பேச்சில் காரம் தெறித்தது. விஜய்யின் முகத்துக்கு நேராகவே காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். பாலியல் துன்புறுத்தல் விவகாரங்களில் ஈடுபட்ட த.வெ.க-வினரின் பட்டியல், மின்வெட்டு விவகாரம் என முதல்வர் விஜய்யை விளாசியெடுத்தார்.

உதயநிதியின் பேச்சைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ட்ரிக்கர் ஆன முதல்வர் விஜய், மறுதினம் தனது பதிலுரையில் தி.மு.க -வைப் புரட்டியெடுத்துவிட்டார். பார்ட்டி ப்ண்ட், உங்க அப்பாவைக் காணோம் எனும் குட்டி ஸ்டோரி, முன்னாள் முதல்வரின் செய்கையை நக்கலாகச் செய்தது எனச் சூடேற்றினார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, விஜய்க்கு எதிராகப் பேசியிருந்தாலும் அவையில் எப்படிப் பேச வேண்டுமோ, அப்படியொரு பேச்சை வெளிப்படுத்தினார்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவருக்கு பதில் சொல்லியிருக்க வேண்டிய முதல்வர் நேரடியாக தி.மு.க எதிர்ப்புக்குள் சென்றது விமர்சனப் பொருளானது. பாலியல் குற்றம் செய்ததாகக் கருதப்படும் த.வெ.க-வினருக்கு எம்.எல்.ஏ சரவணன் துணைபோனதாக உதயநிதி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் விஜய் எந்த பதிலும் தரவில்லை. ஆனால், இருவருக்குமான வார்த்தைப் போர் மிகுந்த சுவாரஸ்யத்தையும் இளைஞர்களைச் சட்டமன்றத்தை நோக்கியும் திருப்பியிருக்கிறது.

முதல் கூட்டத் தொடரிலேயே விஜய் – உதய் இடையிலான மோதல் உச்சம் தொட்டுவிட்ட நிலையில், அடுத்த அரசியல் நகர்வுகளில் எந்தப் பஞ்சமும் இருக்கப்போவதில்லை. அரசின் மீதான விமர்சனங்களை மட்டுமே முன்வைக்கும் தி.மு.க., அடுத்தகட்டமான களப் போராட்டங்களுக்கு ஆயத்தமாகிறது. அதிலும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியே நேரடியாகக் களத்துக்குச் செல்லவும் ஆயத்தமாகிவருகிறார்.

அதிகாரிகளுடன் இன்றளவிலும் நெருக்கம் காட்டும் தி.மு.க புள்ளிகள், அமைச்சர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையிலும் வியூகம் அமைத்து வருகிறார்கள். பதிலுக்கு விஜய், எதிர்க்கட்சிகளை அடக்குவதற்குச் சில திட்டங்களைப் போட்டு வைத்திருக்கிறார். மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட்டவர்களை விடவும் மாட்டோம் என அதிரடித்திருப்பவர், தி.மு.க ஆட்சியில் ஊழல் செய்தவர்களுக்கு ஸ்கெட்ச் போடச் சொல்லியிருக்கிறார்.

லஞ்ச ஒழிப்புத்துறையை வைத்து ரெய்டு நடத்தி, வழக்கு பதிந்து, அமலாக்கத்துறை அதைக் கையிலெடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார். மறுபக்கம், தி.மு.க-வினர் பட்டவர்த்தனமாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தார்கள் என்பதை நிறுவ ஏகப்பட்ட நரேட்டிவ்களைச் செய்துவருகிறார்கள் த.வெ.க -வினர். விஜய்க்கும் உதய்க்குமான நீயா நானா யுத்தம்தான் அடுத்த ஐந்தாண்டு தமிழக அரசியலாக இருக்கப்போகிறது.

பொய்யான பிம்பத்துல இந்த ஆட்சி ஓடுது. இது வெறும் சோப்பு நுரைக் குமிழிதான். விஜய் பிம்பத்தை நாம உடைச்சாலே, த.வெ.க முகத்திரை கிழிஞ்சிடும். அதுக்கு, ஆறு தொகுதி இடைத்தேர்தலிலும் த.வெ.க தோக்கணும். அதன் மூலமா, அந்தக் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இல்லைன்னு நிரூபணமாகிடும் என்று இடைத்தேர்தலைச் சந்திக்கவிருக்கும் தொகுதிகளின் மாவட்டச் செயலாளர்களிடம் பேசியிருக்கிறார் உதயநிதி.

இடைத்தேர்தலில் கட்சியை வெல்லவைப்பது என்னுடைய பொறுப்பு என சவால்விட்டு கோதாவில் குதித்திருக்கிறார் உதய். அதேசமயம், `இடைத்தேர்தல் மட்டுமல்ல, தமிழகத்தில் இனி எந்தத் தேர்தல் வந்தாலும் த.வெ.க-தான் வெல்லும் என்ற தீர்க்கமான நம்பிக்கையில் இருக்கிறார் விஜய். ஆக. விஜய் – உதய் இடையிலான வார்த்தை மோதல்களும், ஈகோ யுத்தமும் இடைத்தேர்தல் களத்திலும் எதிரொலிக்க விருக்கின்றன.

எது எப்படியோ தமிழக அரசியலில் இனி பரபரப்புக்குப் பஞ்சமே இருக்காது. விஜய்யா உதய்யா தினம் தினம் பார்க்கப்போகிறோம்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *