
சென்னை:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலைத் தொடங்கியது. சேப்பாக்கம் சமூக நல ஆணையரகம் அருகில் போடப்பட்ட சாமினா பந்தலில் உண்ணாவிரதம் இருந்தனர்.
சத்துணவு ஊழியர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யவும், 95 அரசாணையை ரத்து செய்தல், ஓய்வு பெறும்போது ஒட்டுமொத்த தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
83 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களைப் போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடக்கிறது. சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் ஆர்.கலா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெஸி வரவேற்றார்.
மாநில துணை தலைவர்கள் பெரியசாமி, அண்ணாதுரை, தமிழரசன், மஞ்சுளா, வாசுகி, மாநில செயலாளர்கள் கற்பகம், சுமதி, மகேஸ்வரி, பாண்டிச் செல்வி, லதா, நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துப் பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இரவிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து நாளைக் காலையில் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
