
நாட்டின் வட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல நகரங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, இமாச்சலம், உத்தரக்கண்ட், உத்தரப்பிரதேச மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இராஜஸ்தானின் பல்வேறு நகரங்களில் நேற்றிரவு கனமழை பெய்துள்ளது. அஜ்மீரில் விடிய விடியக் கனமழை பெய்ததில் ஒரே நாளில் 23 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அங்குள்ள ஆனா சாகர் ஏரி நிரம்பி நகருக்குள் வெள்ளம் புகுந்தது. கால்வாய்போல் சாலையில் பாயும் வெள்ளத்தைத் தடுக்க மணல் மூட்டை அடுக்கி வைத்துள்ளனர்.
இதேபோல இராஜஸ்தானின் பாலி நகரிலும் நேற்றிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.இமாச்சலம், உத்தரக்கண்ட், பஞ்சாப், அரியானா, தில்லி மாநிலங்களில் கனமழை பெய்ததால் கங்கையாற்றிலும் அதன் துணையாறான யமுனையிலும் வெள்ளப்பெருக்கு எற்பட்டுள்ளது.
இதனால் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கையும் யமுனையும் கலக்குமிடத்தில் படித்துறைகளும் படகுத் துறைகளும் மூழ்கியுள்ளன.வாரணாசியிலும் கங்கையாற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் கரையோரப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் தெற்குக் கன்னட மாவட்டத்தில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் மங்களூர், உள்ளல், பந்த்வால் வட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.



