முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து காலமானார்..!

Advertisements

கருணாநிதியின் மூத்த மகன் முத்து அகவை மூப்புக் காரணமாகச் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 77.
1948ஆம் ஆண்டு சனவரி 14 ஆம் நாள் கருணாநிதிக்கும் அவர் மூத்த மனைவி பத்மாவதிக்கும் திருக்குவளையில் பிறந்தவர் முத்து. இவர் பிறந்தவுடனேயே தாயை இழந்தவர்.
கருணாநிதியின் கலையுலக வாரிசாக அறியப்பட்ட இவர், பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், அணையா விளக்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் பாட்டும் பாடியுள்ளார். நல்ல மனத்தில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா என்ற பாடல் புகழ்பெற்றது.
திமுகவிலும் திரைத்துறையிலும் முத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை அறிந்துதான் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியதாகக் கூறுவர். ஒரு கட்டத்தில் முத்துக்கும் கருணாநிதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் அதிமுகவில் இணைந்தார்.
உடல்நலம் குன்றிய பின் அரசியல், திரைத்துறை இரண்டிலும் இருந்து ஒதுங்கி இருந்த முத்து இன்று காலையில் காலமானார். அவருக்கு வயது 77. முத்து உடல் உறவினர்களின் அஞ்சலிக்காகச் சென்னைக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவர் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
முத்து இறந்ததை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *