பேருந்து நிற்காத இடத்தில் நிழற்குடை எதற்கு? – கனிமொழியிடம் மக்கள் கேள்வி!

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே ஓடக்கரையில் புதிதாகப் பயணிகள் நிழற்குடையைத் திறந்து வைத்த மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம் பொதுமக்கள் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்தனர்.

காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட ஓடக்கரையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஆறரை இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை மக்களவை உறுப்பினர் கனிமொழி, சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா இராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அப்போது அங்கு வந்த உள்ளூரைச் சேர்ந்த பெண்கள், பேருந்தே நிற்காத இந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை எதற்கு எனக் கேள்வி கேட்டனர். அதற்குப் பதிலளித்த கனிமொழி, இப்போது நிற்காமல் இருக்கலாம், ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் பேருந்துகள் நின்று சென்றிருக்குமே என்று கூறினார்.

அப்போதும் அவரை விடாத பெண்கள், திமுக ஆட்சிக்காலத்திலும் எந்தப் பேருந்தும் நின்று செல்லவில்லை என்பதைச் சுட்டிக் காட்டியதுடன், இனியாவது இந்த நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *