விடாது மழை! தத்தளிக்கும் வட மாநிலங்கள். இன்னும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

Advertisements

யமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டி நீர் ஓடும் நிலையில், மழையால் மேலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கனமழையால் வட மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், மேலும் 5 நாட்களுக்கு வட மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Advertisements

டெல்லி உள்பட வட இந்தியாவில் கடந்த சில நாட்களவே கனமழை பெய்து வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். அங்கு மழை சற்று ஓய்ந்துள்ளதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். ஹரியானா மாநிலத்தில் யமுனை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை புரட்டி எடுத்தது. இதனால், அந்த மாநிலத்தில் உள்ள ஹத்னிகுண்ட் அணையில் நீர் மட்டடம் கிடு கிடுவென உயர்ந்தது.

இதனால், யமுனை ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை ஹரியானா அரசு திறந்து விட்டது. இதனால் யமுனை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. போதாக்குறைக்கு டெல்லியிலும் கனமழை புரட்டி எடுத்தது. கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் கனமழை கொட்டி தீர்த்தது. தற்போது மழை விட்டுள்ள போதிலும் யமுனை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. இதானல், தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அபாய அளவான 205.33 மீட்டர் உயரத்ததை தாண்டிய நீர் மட்டம், நேற்று மாலையில், 207.71 மீட்டராக இருந்தது. தற்போதைய நீர்மட்டம் 208 மீட்டரை தாண்டியுள்ளது. கடந்த 1978-ம் ஆண்டு இருந்த 205.49 மீட்டர் நீர்மட்டம்தான், இதுவரை அதிகபட்ச அளவாக இருந்தது.

யமுனை ஆற்றை ஒட்டிய டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. யமுனை ஆற்றின் கரையோர பகுதிகளில் 4 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய 144 தடை உத்தரவை போலீசார் விதித்துள்ளது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

யமுனை நதியில் தண்ணீர் விடுவதை குறைக்க வலியுறுத்துமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து யமுனை ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்து வரும் நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் இருந்து 500 மீட்டர் மட்டுமே தொலைவில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியின் ரிங் ரோடு பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் காஷ்மீரி கேட் ஐஎஸ்பிடி மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே, வட மாநிலங்களில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தென் மாநிலங்களில் படிப்படியாக மழை குறையும். குறிப்பாக கர்நாடகா கேரளாவில் மழை குறையும். கர்நாடகா, கேரளாவில் இன்று, நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வட மாநிலங்களை பொறுத்தவரை மேலும் 5 நாட்களுக்கு மிக கனமழை தொடரும். சிக்கிம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மேகாலயா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. உத்தரகாண்டில் ஏற்கனவே கனமழை பெய்துவரும் நிலையில் மேலும் 5 நாட்களுகு கனமழை தொடரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பெய்த மிக கனமழையால் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. அங்குள்ள வீடுகள், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் முயற்சியில் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை அங்குள்ள மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *