
டெல்லியின் காற்று மாசுபாட்டில் 40 விழுக்காடு வாகனப் புகை வெளிப்பாட்டால் ஏற்படுவதாகக் கூறியுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோலிய எரிபொருளில் இருந்து மின் வாகனங்கள், ஹைட்ரஜன் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் தலைநகர் தில்லியில் வாகனங்களின் புகை, தொழிற்சாலைகளின் புகை ஆகியவற்றால் காற்று மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குளிர்காலத்தின் பனிமூட்டமும் சேர்ந்துகொண்டதால் எங்கும் புகைமூட்டமாகக் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் தில்லியில் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மத்தியச் சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இறக்குமதியைக் குறைத்துக்கொண்டு ஏற்றுமதியை அதிகரிப்பதும் உண்மையான நாட்டுப்பற்று என்று குறிப்பிட்டார்.
தில்லியில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தால் தொண்டை கட்டும் அளவுக்குக் காற்று மாசுபட்டுள்ளதாகக் கூறினார்.
இந்தக் காற்று மாசுபாட்டில் 40 விழுக்காடு வாகனப் புகையால் ஏற்படுவதாக ஒப்புக்கொண்டார்.
பெட்ரோலிய எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்காமல் காற்று மாசுபடுவதைக் கட்டுப்படுத்த முடியாது எனத் தெரிவித்தார்.
காற்று மாசைக் குறைக்க ஒரே வழி, வாகனங்களில் பெட்ரோலிய எரிபொருள் பயன்படுத்துவதைத் தவிர்த்து அனைவரும் மின்வாகனங்கள், ஹைட்ரஜன் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்று நிதின் கட்கரி கேட்டுக்கொண்டார்.



