ககன்யான் திட்டத்திற்குப் பலம் சேர்க்கும் எல்விஎம்3 வெற்றி..!

இதுவரை இல்லா வகையில் இந்தியாவில் இருந்து 6 டன் எடைகொண்ட செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் ககன்யான் திட்டத்துக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

ஆந்திரத்தின் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து எல்விஎம்3 – எம்6 ராக்கெட் மூலம் புளூபேர்ட் பிளாக் 2 என்கிற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் இஸ்ரோ தலைவர் நாராயணனும் மூத்த அறிவியலாளர் குழுவும் அந்த ராக்கெட் மாதிரியைக் கையில் வைத்துப் படம் பிடித்துக் கொண்டனர்.

அதன்பின் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், அமெரிக்காவின் புளூபேர்டு  பிளாக் 2 எனப்படும் தொலைத்தொடர்புக்கான செயற்கைக் கோளை வணிக நோக்கில் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாகத் தெரிவித்தார். எல்விஎம்3 ராக்கெட் ஒன்பதாவது முறை ஏவப்பட்டுள்ளதாகவும், அனைத்து முறையும் வெற்றிபெற்றுள்ளதாகவும்  குறிப்பிட்டார்.

இதுவரை இல்லா வகையில் இந்திய மண்ணில் இருந்து மிக அதிக அளவாக 6 டன் எடைகொண்ட செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளதாக நாராயணன் தெரிவித்தார். இது வரை இந்திய மண்ணில் இருந்து 34 நாடுகளின் செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளதாகவும், இந்தச் செயற்கைக்கோள் 434ஆவதாகும் என்றும் குறிப்பிட்டார்.

ககன்யான் திட்டத்துக்காக எல்விஎம் 3 எம்6 ராக்கெட் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் நாராயணன் தெரிவித்தார்.
சந்திரயான் 3 வெற்றியைப் பார்த்து ஜப்பான் நம்முடன் சேர்ந்து செயல்பட விரும்பியதாகவும், தொழில்நுட்பத்தில் வளர்ந்த ஒரு நாடு நம்முடன் கூட்டுச் சேர விரும்புவது நமக்குப் பெருமிதம் என்றும் குறிப்பிட்டார்.
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் இந்தியா வளர்ந்துள்ளதாகவும் நாராயணன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *