
சமீபத்தில், பீகாரில் ஆயுஷ் மருத்துவர் பட்டமளிப்பு விழா நடந்தது. அதில் பீகாரின் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்துகொண்டு பட்டமளித்தார்.அந்த விழாவில் பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து பட்டம் பெற வந்தார். அவரை ஹிஜாப்பை நீக்குமாறு கூறிகொண்டே, அவரது ஹிஜாப்பை இழுத்துவிட நிதிஷ் குமார் முயற்சி செய்தார்.
அப்போது மேடையில் இருந்த துணை முதல்வர் சாம்ராஜ் சவுத்ரி, நிதிஷ் குமாரின் செயலை தடுக்க முயன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.நிதிஷ் குமாரின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. நிதிஷ் குமாரின் இந்தச் செயலுக்கு காங்கிரஸ், “பீகாரின் உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் வெளிப்படையாகவே இந்த மாதிரியான கீழ்த்தரமான செயலில் ஈடுபடுகிறார்.
அந்த மாநிலத்தில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பார்கள் என்று யோசியுங்கள்.
நிதிஷ்குமார் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கீழ்த்தரமான செயலை மன்னிக்க முடியாது” என்று எக்ஸ் பக்கத்தில் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
ராஷ்டிரியா ஜனதா தளம் தனது எக்ஸ் பக்கத்தில், “நிதிஷ் ஜிக்கு என்ன ஆனது? அவரது மனநலம் முழுமையாக பரிதாபக்கரமாக ஆகிவிட்டது அல்லது நிதிஷ் பாபு 100 சதவிகிதம் சங்கி ஆகிவிட்டார்” என்று பதிவிட்டுள்ளது.நிதிஷ்குமாரின் செயலுக்கு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘நிதிஷ்குமார் பொதுவெளியில் ஒரு முஸ்லிம் பெண்ணை அவமானப்படுத்தியுள்ளார். அந்த பெண்ணுக்கு சான்றிதழ் கொடுக்க விரும்பவில்லையென்றால், அவரை தவிர்த்திருக்கலாம். அதை விடுத்து விட்டு, ஹிஜாப்பை இழுப்பது அவமானப்படுத்தும் செயல். சில ஆண்டுகளுக்கு முன்பு நிதிஷ்குமார், ஜனநாயகவாதியாகவும் புத்திசாலியான அரசியல்வாதியும் கருதப்பட்டார்.
தற்போது, அதில் இருந்து அவர் விலகி செல்ல தொடங்கியுள்ளார். இப்போது, அவரின் முகத்திரை கிழிந்து உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முக்தி, ‘நிதிஷ்குமார் உடனடியாக பதவி விலக வேண்டும். நிதிஷ்குமார் தனிப்பபட்ட முறையில் பெண்மைக்கு இழுக்கு செய்துள்ளார்.
மத உரிமையை பறிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்’ என்று குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீரை சேர்ந்த பல அரசியல் கட்சிகள் நிதிஷ்குமார் அராஜாகமாக செயல்பட்டுள்ளார். அவரின், செயல் வெட்கக்கேடானது‘ என்றும் விமர்சித்துள்ளனர்.

