“ஒரிஜினல் களவாணி விஜய் தான்” உண்மையை உடைத்த எம்.ஆர். விஜயபாஸ்கர்.!

Advertisements

தமிழக அரசியல் களத்தில் இப்போது ‘களவாணி’ என்ற வார்த்தைதான் கடும் புயலைக் கிளப்பியிருக்கிறது! முதலமைச்சர் ஜோசப் விஜய், திமுக மற்றும் அதிமுகவை ‘கூட்டு களவாணிகள்’ என விமர்சித்ததற்கு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கொடுத்திருக்கும் பதிலடி, அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ‘விஜய் தரப்பு எங்களை அப்ரோச் செய்தார்கள்’ என்று வெளிப்படையாகப் பேசியிருப்பது, குதிரை பேரம் குறித்த பழைய சர்ச்சைகளை மீண்டும் கிளறியிருக்கிறது. இன்று அரசியல் வட்டாரத்தில் என்ன நடக்கிறது? விரிவாகப் பார்ப்போம்..

கரூர் மக்கள் சந்திப்பில் நேற்றைய தினம் பேசிய முதல்வர் விஜய், கடந்தாண்டு நடந்த துயர சம்பவம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அதாவது கரூர் துயரத்திற்கு காவல்துறை தான் காரணம் என்பதை போன்று அவரின் பேச்சு அமைந்து இருந்தது. அதே போல் திமுக, அதிமுக கட்சிகள் இரண்டும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு முயற்சி செய்தன. இரண்டு கட்சிகளும் கூட்டு களவாணிகள் எனவும் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அவருடைய இந்த பேச்சு திமுக, அதிமுகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் முதல்வரின் பேச்சுக்கு கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் விவாதங்களை கிளப்பியுள்ளது.

கரூர் சம்பவத்தில் விஜய் பேசியது குறித்து , செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன்,ஒரு முதலமைச்சர் களவாணி என்று பேசுகிறாரே, இதே போல் அவரை பார்த்து சொல்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும். விஜய் தான் களவாணி. நம்ம ஊர்ல ஆடு திருடன், மாடு திருடன் என்று சொல்வாங்க. எங்க ஊர்ல சிலர் ஆடு மட்டும் தான் திருடுவான். சிலர் மாடு மட்டும் திருடுவான். அதே போல் எம்எல்ஏ திருடர்கள் நீங்கள். எம்எல்ஏ களவாணி. முதன் முறையாக அமமுக எம்எல்ஏவை ஆசை வார்த்தை காட்டி திருடுனீங்க.

இதை எதற்காக அடிக்கடி சொல்கிறேன் என்றால் உண்மையாக நடந்தது.ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட அந்த லெட்டர் போர்ஜரி. இப்படி ஆட்சி அமைப்பதற்கே தகிடு தத்தங்கள் செய்தவர்கள். எங்கள் அமமுக எம்எல்ஏவை குதிரை பேரம் செய்யவில்லை என்று ஒரு வீடியோவை வெளியிட்டார்கள். இதில் யார் எம்எல்ஏ களவாணிகள். இப்படி மற்ற கட்சிகளை வெற்றி பெற்ற அகம்பாவத்தில் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் டிடிவி தினகரன்.

அதே போல் எம்ஜிஆரின் அன்பு, ஜெயலலிதாவின் வீரத்தையும் விஜய்யிடம் பார்க்கிறேன் என்று எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியது குறித்து கருத்து தெரிவித்த அவர், அப்படி சொல்ல சொல்லி இருப்பாங்க. எதுக்காக அவர் இபிஎஸ் மீது கோபம் இருந்தால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து வேறு கட்சிக்கு போக வேண்டிய தேவை இருக்கிறதா? விஜய்யை விடவும் எனக்கு அழகான தமிழில் பதில் சொல்ல தெரியும். இவர்களை எல்லாம் அங்கு வர வைப்பது எதுவென்று எனக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக – அதிமுக ஆட்சி அமைக்க இருந்தார்கள். ரெண்டு பேரும் கூட்டணி களவாணிகள் சொல்றார். நீங்க பண்ணி இருக்கிறதே களவாணி வேலை தானே. திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை களவாணி அவர்கள் ஆதரவுடன் அமைச்சர் பதவி கொடுத்து ஆட்சி அமைத்து இருக்கிறீர்கள். அமமுக எம்எல்ஏவை களவாண்டு தான் லெட்டர் வாங்கி கொடுத்தீங்க. ஆறு பேரை ராஜினாமா செய்ய வைத்ததே களவாணித்தனம் தானே. எனவே உண்மையான ஒரிஜினல் களவாணி திரு. விஜய் அவர்கள் தான் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் டிடிவி தினகரன்.

மேலும் , சமீபத்தில் அதிமுகவை சார்ந்த இரண்டு விஜயபாஸ்கர்களும் தவெகவில் தங்களை இணைத்து கொண்டனர். தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இந்நிலையில் எம்.ஆர். விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தது குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் விவாதங்களை கிளப்பியுள்ளது.

இது குறித்து அவர் பேசும்போது , விஜய் தலைமையிலான அரசு எங்களை அப்ரோச் பண்ணாங்க.பிடிச்சு இருந்தது. வந்துட்டோம். 42 ஆண்டுக்காலமாக அதிமுகவில் உறுப்பினராக இருந்திருக்கிறேன். பல பதவிகளில் இருந்திருக்கிறோம். உள்ளாட்சி, அமைச்சர் என பல பொறுப்புகள் வகித்துள்ளோம். ஆனாலும் மிகுந்த மன வேதனையுடன், பலக்கட்ட யோசனைகளுக்கு பிறகு தான் தவெகவில் இணையும் முடிவினை எடுத்தோம் என தெரிவித்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்.

அதோடு தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய கருத்து கேட்டோம். சும்மா கிடையாது. எல்லா நிர்வாகிகளிடம் கருத்துக்கேட்டு அவசரப்படாமல் அவர்களின் விருப்பத்தின் பேரில் ஆலோசனை மேற்கொண்டோம். ஒரு சிலர் வேண்டாம் சொல்வாங்க. அது மறுப்பதற்கு இல்லை. ஆனால் மெஜாரிட்டியாக 95 சதவிகிதம் தொண்டர்கள் கருத்துக்களின் அடிப்படையில் மிக பிரம்மாண்டமான மாநாடு நடந்து முடிந்துள்ளது. இதுவரை தவெகவில் இது மாதிரி ஒரு இணைப்பு விழா நடந்தது இல்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

கரூர் விஜயபாஸ்கர் இந்த தகவல்களை பகிர்ந்த சமயத்தில், அவருடன் விராலிமலை சி. விஜயபாஸ்கரும் உடனிருந்தார். இதற்கிடையில் தவெகவில் இருந்து தங்களை அப்ரோச் செய்ததாக எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியுள்ளது மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் இருந்ததால் அதிமுகவினர் அவர்களாக தவெகவில் இணைந்து வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் தெரிவித்தனர்.இதற்கிடையில் விஜய் தலைமையிலான அரசு எங்களை அப்ரோச் செய்ததாக கரூர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் பேசியுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் அதிமுகவினர் அவரின் இந்த பேச்சு குறித்து பல விதமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதே போன்ற ஒரு கருத்தினை தெரிவித்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை கிளப்பியது. அதாவது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு மதிமுக எம்எல்ஏக்களை, அவர்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை தவெக சார்பில் இருந்து ராஜினாமா செய்ய சொன்னதாக தெரிவித்தார். அதோடு அவர்கள் ராஜினாமா செய்து விட்டு இடைத்தேர்தலில் போட்டியிட்டால், அவர்களுடைய வெற்றிக்கு நான் பொறுப்பு. நான் அவர்களுக்காக பிரச்சாரம் செய்வேன் என முதல்வர் விஜய் பேசியதாகவும் தெரிவித்து இருந்தார் வைகோ.

அவருடைய இந்த பேச்சு சர்ச்சைகளை கிளப்பியதுடன், எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக வைகோவே வாக்குமூலம் கொடுத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்தன. அவருடைய இந்த பேச்சை வைத்து ஆளுநரிடம் புகாரும் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில் எம்.ஆர். விஜயபாஸ்கரும் தவெகவில் இணைய தங்களை அப்ரோச் பண்ணதாக அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் , எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களைத் தங்களின் பக்கம் இழுப்பதும், அதற்குப் பதிலாக அவர்களை இடைத்தேர்தலில் நிற்க வைப்பதும் விஜய் அரசின் புதிய அரசியல் வியூகமா? அல்லது இது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுதானா? என்ற கேள்விகள் தமிழக அரசியலில் எழுந்துள்ளன. முதல்வர் விஜய்யின் ‘கூட்டு களவாணிகள்’ என்ற பேச்சு, எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தரப்பினரை மட்டுமல்லாது, டிடிவி தினகரன் போன்ற அரசியல் தலைவர்களையும் கொதிப்படையச் செய்துள்ளது. இந்த மோதல்கள் வரும் காலங்களில் எந்த மாதிரியான அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *