
நிபா வைரஸ் பரவல்! உஷாராக இருக்க பொதுமக்களுக்கு அறிவுரை.
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பரவுவதாகவும், அந்தத் தொற்று பாதித்து 2 பேர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது…
கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரை பகுதியைச் சேர்ந்த 49 வயது மதிக்கத் தக்க ஒரு நபர் கடந்த மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு எந்தவித காய்ச்சல் பாதிக்கப்பட்டிருந்தது என்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்துள்ளது. இந்நிலையில் அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாகக் காதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
4 மற்றும் 9 வயதுடைய 2குழந்தைகள், 25 மதிக்கத் தக்க ஒருவர் என 3பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். அவர்களிடமிருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இருக்கிறது. அதேபோல் வடகரை அருகே உள்ள திருவள்ளூரை சேர்ந்த 40வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர் காய்ச்சல் பாதித்துத் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் சிகச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களாகக் கண்டறியப்பட்டவர்களிடம் சேகரிக்கப்பட்டுள்ள மாதிரிகள் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இருககிறது. அந்தப் பரிசோதனை முடிவு வந்தபிறகே, இறந்தவர்கள் 2 பேரும் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக இறந்தார்களா? என்பது தெரியவரும்.
கோழிக்கோடு பகுதியில் 2 பேர் காய்ச்சல் பாதித்து இறந்திருக்கும் சம்பவம்குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் அவரச உயர்மட்ட கூட்டத்தைக் கூட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். கோழிக்கோட்டில் இறந்த 2பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
சுகாதாரத்துறையின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளாவில் நிபா வைரஸ் முதன்முதலாகக் கடந்த 2018-ம் ஆண்டு பதிவானது. அப்போது கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் 17 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.


