Nepal Floods : “என் அம்மாவை ஒருமுறையாவது கண்ணுல காட்டுங்க – கதறும் உறவினர்கள்.!

Advertisements

“என் அம்மாவை ஒருமுறையாவது கண்ணுல காட்டுங்க…” – நேபாள வெள்ளத்தில் சிக்கிய தருமபுரி பெண்கள்; தகவல் கேட்டு கதறும் உறவினர்கள்

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இரு பெண்கள் நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.

தருமபுரி மாவட்டம் மணியம்பாடியைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். தற்போது ஓசூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது மனைவி பிரேமவாணி, 45 வயது.இதேபோல் தருமபுரி காந்திநகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமாரின் மனைவி புஷ்பா, 55 வயது. இவர்கள் இருவரும் உறவினர்கள்.

இந்த நிலையில், கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் தனியார் சுற்றுலா ஏஜென்சி மூலம் ஆன்மிக சுற்றுலா செல்வதற்காக கடந்த 23ஆம் தேதி நேபாளத்திற்கு சென்றுள்ளனர். நேபாளத்திற்கு சென்றிருந்த இருவரும் அங்கிருந்து தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு கூட வீடியோ காலில் குடும்பத்தினருடன் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால், அடுத்த நாள் காலையில் நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் உள்ள கோஷி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பிரேமவாணி மற்றும் புஷ்பா ஆகிய இருவரும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, நேற்று காலை முதல் இருவரின் செல்போன்களையும் குடும்பத்தினர் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர்.
ஆனால், தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியாததால், இருவரும் எந்த இடத்தில் இருக்கிறார்கள்? பாதுகாப்பாக உள்ளார்களா? வெள்ளத்தில் சிக்கியுள்ளார்களா? என்பது தெரியாமல் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியிலும், கவலையிலும் உள்ளனர்.

இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கியதாக கூறப்படும் புஷ்பாவின் வீட்டிற்கு தருமபுரி தாசில்தார் சுகுமார் நேரில் சென்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். மேலும், நேபாளத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தவுடன் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படும் என்றும், அதுவரை பொறுமையாக இருக்குமாறும் கூறி ஆறுதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இதுவரை புஷ்பா மற்றும் பிரேமவாணி குறித்து எந்த உறுதியான தகவலும் கிடைக்காததால் குடும்பத்தினர் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். “எனது தாய் புஷ்பா எங்கே இருக்கிறார்? எந்த நிலையில் இருக்கிறார்? அவரை ஒருமுறையாவது எங்களிடம் பேச வையுங்கள்…” என கண்ணீருடன் கூறுகிறார் புஷ்பாவின் மகள் லட்சுமி பிரியா.

புஷ்பாவின் கணவர் விஜயகுமாரும், தனது மனைவியின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லாததால் செய்வதறியாமல் தவித்து வருகிறார்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “எங்கள் தாய் புஷ்பா மற்றும் உறவினர் பிரேமவாணி ஆகியோர் நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். கடைசியாக வீடியோ காலில் பேசியுள்ளனர்.

அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள், எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. குறைந்தபட்சம் ஒருமுறையாவது அவர்களிடம் பேச வைத்து, அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க குடும்பத்தினர் சென்றுள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கியதாக கூறப்படும் தருமபுரியைச் சேர்ந்த இரு பெண்களின் நிலை என்ன?

அவர்கள் தற்போது எங்கு உள்ளனர்? அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய தகவலை பெற்று, குடும்பத்தினருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்பதே உறவினர்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *