
ஒரு கயிற்றில் கட்டப்படுவது வெறும் முடிச்சல்ல… அது அண்ணன் – தங்கை பாசத்தின் அழியாத பந்தம்!
உறவுகள் பல இருந்தாலும், சகோதர பாசத்திற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. அந்த பாசத்தையும், அன்பையும், பாதுகாப்பையும் கொண்டாடும் அழகான திருநாள்தான் ரக்ஷா பந்தன்.
ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையில், சகோதரிகள், தங்களது சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி எனப்படும் புனித நூலைக் கட்டுகிறார்கள். ராக்கியை ஏற்றுக்கொள்ளும் சகோதரர், தனது சகோதரியின் பாதுகாப்புக்கும், வாழ்க்கை நலனுக்கும் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்ற உறுதியை வழங்குவதாகக் கருதப்படுகிறது.
அதன் அடையாளமாக, ராக்கி கட்டிய பிறகு சகோதரர் தனது சகோதரிக்கு பரிசு அல்லது பணம் வழங்குவது வழக்கம். ஆனால், ரக்ஷா பந்தன் என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல. இது அன்பை நினைவுபடுத்தும் ஒரு நாள், உறவை வலுப்படுத்தும் ஒரு நாள், பாசத்திற்கு உறுதி கொடுக்கும் ஒரு நாள்!
ரக்ஷா பந்தனின் வரலாற்றைப் பற்றி பல்வேறு கதைகளும், மரபு நம்பிக்கைகளும் சொல்லப்படுகின்றன.அதில் ஒன்று மகாபாரதத்துடன் தொடர்புடைய கதை.. போர்க்களத்தில் கிருஷ்ணரின் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தபோது, அதைப் பார்த்த திரௌபதி தனது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, கிருஷ்ணரின் மணிக்கட்டில் கட்டியதாகக் கூறப்படுகிறது.
திரௌபதியின் அந்த அன்பையும் பாசத்தையும் கண்டு நெகிழ்ந்த கிருஷ்ணர், அவரை தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு, எந்த ஆபத்து வந்தாலும் அவரைப் பாதுகாப்பதாக உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோல்வியடைந்தபோது, கௌரவர்களின் சபையில் திரௌபதிக்கு அவமானம் ஏற்படுத்த முயன்ற சம்பவத்தில், கிருஷ்ணர் அவரது மானத்தைக் காப்பாற்றியதாக மகாபாரதக் கதை கூறுகிறது.
ஒரு சிறிய துணித்துண்டில் தொடங்கிய அந்த பாசம், பாதுகாப்பு என்ற மிகப்பெரிய உறுதியாக மாறியது. இதனால்தான், திரௌபதி – கிருஷ்ணர் உறவு, ரக்ஷா பந்தனின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதேபோல், மாவீரர் அலெக்சாண்டரின் இந்தியப் படையெடுப்புடன் தொடர்புடைய ஒரு கதையும் ரக்ஷா பந்தனோடு இணைத்துச் சொல்லப்படுகிறது.
கிமு 326-ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் இந்தியாவுக்குள் படையெடுத்தபோது, போரஸ் மன்னருடன் நடைபெற்ற போரில், அலெக்சாண்டரின் மனைவி ரோக்ஷனா, தனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் போரஸ் மன்னருக்கு புனித நூலை அனுப்பியதாக ஒரு கதை கூறப்படுகிறது.
போரில் அலெக்சாண்டரை வீழ்த்தும் வாய்ப்பு போரஸ் மன்னருக்கு கிடைத்தபோதும், அந்த புனித நூலை நினைத்து அவரை கொல்லாமல் விட்டதாக அந்தக் கதை தெரிவிக்கிறது. வரலாற்றின் பக்கங்களில் உண்மையும், மரபுக் கதைகளில் நம்பிக்கையும்.. இதேபோல் ரக்ஷா பந்தனைச் சுற்றி பல கதைகள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன.
இன்றைய காலகட்டத்தில் ரக்ஷா பந்தன் ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்குள் மட்டுமே கொண்டாடப்படும் விழாவாக இல்லை. வட இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த இந்த விழா, தற்போது தென்னிந்தியாவிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சகோதரிகள் தங்களது சகோதரர்களின் கைகளில் மஞ்சள் நூல் அல்லது அழகாக வடிவமைக்கப்பட்ட ராக்கியை கட்டுகிறார்கள்.
சிறு வயதில் ஏற்பட்ட சின்னச் சின்ன சண்டைகள், யார் பெரியவர் என்ற போட்டிகள், ஒருவருடைய பொருளை இன்னொருவர் எடுத்துக்கொண்ட சண்டைகள் என அனைத்தையும் கடந்து, வாழ்க்கை நகரும்போது, என்ன ஆனாலும் நான் இருக்கிறேன் என்று சொல்லும் ஒரு உறவாக மாறுகிறது சகோதர பாசம்.
காலம் மாறலாம், இடங்கள் மாறலாம், தூரங்கள் அதிகரிக்கலாம்… ஆனால், உண்மையான சகோதர பாசம் மட்டும் மாறுவதில்லை. அதனால்தான்… ரக்ஷா பந்தன் என்பது மணிக்கட்டில் கட்டப்படும் ஒரு நூல் மட்டுமல்ல… இதயங்களை இணைக்கும் ஒரு பாசப்பந்தம்!இந்த இனிய ரக்ஷா பந்தன் நாளில், அனைத்து சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையிலும் அன்பும், மகிழ்ச்சியும், நிம்மதியும் என்றென்றும் நிறைந்திருக்கட்டும்.
அனைவருக்கும் இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்! ராக்கி ஒரு நூல் அல்ல, அது வாழ்நாள் முழுவதும் தொடரும் பாசத்தின் உறுதிமொழி!


