
திபெத்தில் அணை உடைந்து மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதால் நேபாளத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரும், மீட்புப் பணியாளர்களும், பொதுமக்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் புதனன்று பனிச்சரிவு ஏற்பட்டுப் பனி உருகி ஆறுகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேபாளத்தின் நுவாக்கோட், ரசுவா ஆகிய பகுதிகளில் போதேகோசி ஆற்றின் கரையில் உள்ள பகுதிகள் பேரழிவைச் சந்தித்தன. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திபெத்தில் உள்ள அணை உடைந்து ஆற்றில் வெள்ளம் பாய்வதாக நேபாளக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து ஆற்றங்கரைப் பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரும், மீட்புப் பணியாளர்களும், பொதுமக்களும் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திரிசூலியில் மீண்டும் ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என அஞ்சப்படும் நிலையில், அங்கு மீட்புப் பணிகளிலும், சாலை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரங்களும் உடனடியாக மேட்டுநிலத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. நேபாளத்தில் நுவாக்கோட்டில் வெள்ளப் பேரழிவு ஏற்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் மிக விரைவாக மீட்புப் பணி நடைபெற்று வருகின்றது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்தவர்களை அங்கிருந்து மீட்டு ஹெலிகாப்டரில் ஏற்றிப் பாதுகாப்பான மேட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்று தங்க வைத்துள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மீட்புப் படையினரும் ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட இரட்டைப் பிள்ளைகள் அங்கிருந்து பாதுகாப்பான பகுதிக்குக் கொண்டுவரப்பட்டு இராணுவத்தின் அரவணைப்பில் உள்ளனர். ரசுவாவில் குகைப்பாதையில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் நேபாள இராணவத்தினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்…



