
1920இல் பட்டுக்கோட்டை திருக்கண்ணபுரம் என்ற ஊரில் ராஜகோபாலன் என்ற நீதிக்கட்சி பிரமுகருக்கு நாராயண சாமி என்ற இயற்பெயருடன் இவர் மகனாகப் பிறந்தார். இவர் தம்பி சீனி வாசன். பின்பு இருவரும் திராவிடர் இயக்கப்பற்றால் நெடுஞ்செழியன், செழியன் என்று பெயர் மாற்றிக் கொண்டனர்.
* இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதே முதல் மாணவர். இலக்கியம், வரலாறு, அரசியல் விஞ்ஞானம் போன்றவற்றில் எந்தக் கேள்வியைக் -கேட்டாலும் மடை திறந்த வெள்ளம் போல் சொற்பொழி வாற்றுவதில் வல்லவர்.
* ஆரம்பத்தில் திக்குவாய்ப் பிரச்சினையால் சரியாகப் பேசமுடியாமல் தவித்த இவருக்கு முறையாகப் பேச்சுப் பயிற்சி தந்தவர் சக மாணவரான க.இராமையா (பின்னாளில் பேராசிரியர் அன்பழகன்) வேகமாகப் பேசும்போது திக்கித் திணறி வார்த்தைகள் வராதபோது ‘ங்’ என்று ஒரு விதமாகச் சத்தம் வந்தது. அதையே அவரது பேச்சு பாணியாகக் கொண்டு வெற்றி பெற்றார். பலர் அவர்போல் பேச வேண்டும் என்று பயிற்சி எடுத்தனர்.
* சிதம்பரம் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் சுயமரியாதை இயக்கக் கருத்துக்களைப் பரப்பிய மாணவர்கள் நன்னன், செழியன், அன்பழகன் வரிசை யில் முதன்மைப் பங்கு வகித்தவர் நாவலர்தான்.
* கல்லூரிக் காலங்களில் நீண்ட இளம் தாடி, கருப்புநிற புஷ்கோட், ஆறடிக்கும் மேலான உயரம் என்று நாவலரின் தோற்றம் மிக வித்தியாசமாக இருக்கும். பேச ஆரம்பித்தால் பல இடங்களில் கலவரமும் வரும். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என்று, தான் சொல்ல வந்த கருத்தைச் சொல்லி விட்டுத்தான் அமர்வார், மாணவரான இளந்தாடி நெடுஞ்செழியன்.

* சங்க இலக்கியங்கள், ராமாயணம், பெரியபுராணம் மற்றும் இலக்கண நூல்களைப் படித்து அதை மனப்பாடமாக உரிய இடத்தில் சொல்லித் தன் கொள் கைக்கு மிகப்பெரிய ஆதரவைத் திரட் டுவார் நாவலர்.
* நாவலரும், பேராசிரியரும் மிகப் பெரிய பேச்சாளர்களாக இருந்தபோது அவர்களை அழைத்துத் திருவாரூரில் கூட்டம் போட்டவர் கலைஞர்.
* பாரதிதாசன் பாடல்களை நாவலர் போல் பட்டி தொட்டி எங்கும் பரப்பியவர் யாரும் இல்லை எனலாம். பேச்சு ஆரம் பிக்கும் போதும், இடையிலும், முடிக்கும் போதும் பாரதிதாசன் பாடல்களை எழுச்சியோடு பாடி, தான் சொல்லவரும் கருத்துக்கு வலுசேர்ப்பார் நாவலர்.
* இடி மழைபோல், அருவிபோல் காட்டாற்று வெள்ளம் போல் நாவலர் பேசினாலும் நகைச்சுவை அங்கே இழை யோடும்.
* நாவலரின் தனித்தன்மையான பேச்சைக் கண்டு கேட்டு வியந்த பெரியார், நாவலரை தன்னுடன் சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் சென்றார். அண்ணா அவரது பேச்சை வியந்து நாவலரை நடமாடும் பல்கலைக்கழகம் என்று அழைத்துப் பெருமைப்படுத்தினார்.
* சும்மா என்ற ஒரு வார்த்தையை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு மணி நேரம் நம் வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க வைத்துப் பேசுவார்.
* அண்ணா, நாவலரைப் பொதுச் செயலாளராக்கி ‘தம்பி வா’ தலைமையேற்க வா. உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறேன் என்று அழைத்தார்.
* இலக்கிய உலகிற்கு நாவலர் அளித்த அற்புதமான கொடை அவரது திருக்குறள் உரை, பாவேந்தர் கவிதைகள் திறனாய்வு, திராவிட இயக்க வரலாறு போன்ற நூல்களாகும், திருக்குறளில், நன்கு ஆழக்கால்பட்ட நாவலர், திருக் குறள் மனு தர்மத்திற்கு எதிரான நூல் என்று ஒரு சிறந்த ஆய்வுரையினை அளித்திருப்பார். மதக்கருத்து குறளில் இல்லை என்பதை தனது நெடிய ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளார். இறை, ஊழ், தாமரைக்கண்ணாள். இந்திரன் போன்ற இந்துமதம் சம்மந்தமான கருத்துக்கள் உள்ளன என்பதை மறுத்து அவர் சொன்னதற்கு இன்றுவரை யாரா லும் மாற்றுக் கருத்து சொல்ல முடிய வில்லை.
* அரசியல் வாழ்வில் பல மாறுபாடு களை எடுத்திருந்தாலும் அடிப்படை திராவிடர் இயக்கக் கொள்கைளில் இறுதி வரை மாறாமல் இருந்தார் நாவலர்.
* ஆசிரியர் கி. வீரமணியின் கீதை யின் மறுபக்கம் என்ற நூல் அறிமுக விழாவில் அவர் ஆற்றிய ஆய்வுரை போற்றத் தக்க ஒன்று.
* தன் அமைச்சர் பதவிக்காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அளிக்கப் பட்ட வரவேற்பை ஏற்க மறுத்த நாவலர், தனக்கிட்ட பணியான ஆய்வுப் பணியைச் சிறப்புடன் செய்து முடித்தார். இது அப்போது பலத்த சர்ச்சையை உருவாக்கியது.அப்பொழுது “சபாஷ் சபாஷ் நாவலர்” என்று பாராட்டினார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

* பெரியாரின் அணுக்கத் தொண்டராக இருந்ததால், தன் திருமணத்தைக்கூட திருமணம் முடிந்தவுடன் அறிவித்தார். ஏன் உங்கள் திருமணத்திற்கு என்னை அழைக்கவில்லை என்று கேட்ட தன் நண்பரிடம், எனக்குத் தானே திருமணம் அதில் உங்களுக்கு என்ன வேலை என்று கேட்டு வாயடைத்தார்.
* நாவலர் எழுதிய நூல்களில் மதமும் மூடநம்பிக்கையும் என்ற நூல் மிகச் சிறப்புடையது. தன் வாழ்க்கை வரலாற்றை என் வாழ்வில் கண்டதும் கேட்டதும் என்று எழுதினார். ஒரே தலைப்பைப் பலமுறை பேசினாலும், ஒவ்வொருமுறையும் அந்தப் பொருள்பற்றிக் குறிப்பு இல்லாமல் பேசமாட்டார்.
* பகுத்தறிவாளர்கள்தான் பன்னெடுங் காலம் வாழ்பவர்கள் என்பதற்கு அவர் கூறும் எடுத்துக்காட்டுக்கள், கேட்க மலைப்பாக இருக்கும் இறுதியாகப் பெரியார் வாழ்ந்தது மிக அதிகம் என்று முடிப்பார். நாவலரும் 80 வயதை தாண்டி 2001 ஜனவரி 12ஆம் நாள் மறைந்தார். அதற்கு முன் சென்னை பெரியார் திடலில் 31.12.2000 அன்று திராவிடர் கழகம் நடத்திய புத்தாயிரம் நிகழ்ச்சியில் இறுதியாகக் கலந்து கொண்டு பேசினார். நாவலர் என்னும் பெரியார் தொண்டரின் இறுதிப் பேச்சுப் பெரியார் திடலில் தான் கடைசியாக முடிவுற்றது.
* மனிதன் சிந்திக்க வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும் பகுத்தறிந்து பார்க்க வேண்டும். சிந்திக்க மறுப்பவன் அவனுக்கு, தானே துரோகியாகிறான். சிந்திக்க அஞ்சுபவன் மூடநம்பிக்கையின் அடிமையாகிறான் என்று நாவலர் பேசிய பேச்சு இன்றும் நம் காதுகளில் ஒலிக்கிறது.
வாழ்க டாக்டர் நாவலர்!
நாவலர் அவர்களின் 105 வது பிறந்தநாள் இன்று




