
சோழவரம் அருகே கிளீனர் இயக்கிய வாகனம் விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பு.
VIDEO LINK👇
கிளீனர் இயக்கிய வாகனத்தால் இருவர் பலி | Two killed in vehicle driven by cleaner | Gem TV
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஒரக்காடு கிராமத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்குள்ள தனியாருக்கு சொந்தமான கூரியர் நிறுவனத்திற்கு நேற்று மாலை சரக்கு வாகனம் ஒன்று வந்துள்ளது. அப்போது சரக்கு வாகனத்தைக் கேட் முன்பாக நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் கீழே இறங்கி காவலாளியிடம் அனுமதி கேட்டுள்ளார். காவலாளி கேட்டைத் திறந்து ஓட்டுனரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, சரக்கு வாகனத்தில் வந்த கிளீனர் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து வாகனத்தை இயக்கியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் எதிரே நின்று கொண்டிருந்த காவலாளி மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவர் மீது மோதிச் சுவற்றில் இடித்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய இருவரையும் உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இருவரும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். விசாரணையில் ஒரக்காடு அல்லி நகர் கிராமத்தைச் சேர்ந்த காவலாளி பிரபு (50), தென்காசியை சேர்ந்த ஓட்டுநர் கருப்பசாமி (23) ஆகிய இருவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரது சடலங்களைக் கைப்பற்றிய சோழவரம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சோழவரம் காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய பழைய எருமை வெட்டிப் பாளையத்தை சேர்ந்த கிளீனர் ரூபனை (18) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிளீனர் வாகனத்தை இயக்கியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




