Nawaz Sharif: இன்று நாடு திரும்பினார்!

Advertisements

4 ஆண்டுக்குப் பிறகு  நாடு திரும்பியதால் கட்சியினர் உற்சாகம்!

லண்டனில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த நவாஸ் ஷெரீப், 4 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நாடு திரும்பினார்.

இஸ்லாமாபாத்: பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (வயது 73), நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டைவிட்டு சென்றார். அதன்பின் நாடு திரும்பவில்லை.

லண்டனில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த அவர், 4 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நாடு திரும்பினார். துபாயிலிருந்து உமீத்-இ-பாகிஸ்தான் என்ற சார்ட்டர்டு விமானத்தில் இஸ்லாமாபாத் வந்து இறங்கினார். அவருடன் அவரது குடும்பத்தினர், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நண்பர்களும் வந்தனர்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் நிறுவனரான நவாஸ் ஷெரீப் வருகையால் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இது நம்பிக்கை மற்றும் கொண்டாட்டத்திற்கான நேரம் என்றும், அவர் திரும்பியது பாகிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கு நல்ல விஷயம் என்றும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கவாஜா முகமது ஆசிப் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் செயல்பட்டு வந்த நிலையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அவரது ஆட்சி கடந்த ஆண்டு கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவரும் நவாஸ் ஷெரீப்பின் சகோதரருமான ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகப் பொறுப்பேற்றார். ஆனால், நாடாளுமன்ற பதவிக்காலம் முடிய சில நாட்கள் இருந்த நிலையில் அவர் முன்கூட்டியே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், நவாஸ் ஷெரீப் நாடு திரும்பியிருப்பது கட்சிக்குப் புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. எனினும் வழக்குகள் அவர் தலைக்கு மேல் கத்தி போன்று தொங்கிக்கொண்டிருக்கின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் நவாஸ் ஷெரீப்புக்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம். இந்த வழக்குகளை எதிர்கொள்வது தொடர்பாக அவரது வழக்கறிஞர் குழு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *