சென்னை பள்ளிக்கரணையில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் டம்ப்யார்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வெயில் மற்றும் காற்றின் வேகம் காரணமாக, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்கள் என வரிசையாக அடுத்தடுத்து தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதனால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்து காட்சியளிக்கிறது.
விரைந்த தீயணைப்புத் துறை: விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் பள்ளிக்கரணை, மேடவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
பாதிப்புகள்: முதற்கட்ட தகவல்களின்படி, பல வருடங்களாக வழக்குகளுக்காக பறிமுதல் செய்யப்பட்டு தேங்கிக் கிடந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த தீயில் கருகி சேதமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
காரணம் என்ன?: அருகில் உள்ள காலி மைதானத்தில் இருந்த காய்ந்த புற்களில் ஏற்பட்ட தீப்பொறி பரவியதா அல்லது வெயிலின் தாக்கம் காரணமாக இந்த விபத்து நேரிட்டதா என்பது குறித்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


