தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, முன்னேறுவோம் என்று மாணவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜந்தர் மந்தரில் என்ன நடந்தது என்பதை நாடும், உலகமும் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். சில குழந்தைகள் மிகவும் கீழ்த்தரமான மற்றும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தினர் குற்றம் சாட்டியுள்ளார். தனது மறைந்த தாயாரும் நிந்திக்கப்பட்டார், அது உண்மையிலேயே ஒரு அருவருப்பான காட்சியாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், குழந்தைப் பருவத்தில் தவறுகள் நடப்பதுண்டு, மேலும் அந்த தவறுகளைத் திருத்திக்கொள்ள குழந்தைப் பருவம் ஒரு வாய்ப்பையும் வழங்குவதாகக் கூறியுள்ளார். எனவே, சமூகத்தில் நிலவும் சீற்றத்தை தன்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது எனவும், நமது மகள்கள் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைப் பார்ப்பது ஒரு கலாசார அதிர்ச்சியாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த குழந்தைகளை அரவணைத்து அவர்களுக்குச் சரியான பாதையைக் காட்ட வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார். அவர்களைத் தண்டிப்பதோ, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இழுப்பதோ எதுவும் நிலைமையை மாற்றாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறுவோம். நமது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.


