
வங்கதேசத்தில் நாட்டைவிட்டு விரட்டப்பட்ட முன்னாள் ஆட்சியாளர் சேக் ஹசீனா, அங்குப் போராட்டத்தில் ஈடுபட்டோரைக் கண்டதும் சுட உத்தரவிட்ட ஒலிப்பதிவு வெளியாகியுள்ளது.
1971ஆம் ஆண்டு போரின்போது வங்கதேச விடுதலைக்குப் பாடுபட்டவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கிய அரசின் உத்தரவை எதிர்த்து அங்குக் கடந்த ஆண்டு பெரும் போராட்டம் நடைபெற்றது. 2024 ஆகஸ்டு ஐந்தாம் நாள் தாக்காவில் உள்ள பிரதமரின் வீட்டைப் பொதுமக்களும் போராட்டக்காரர்களும் முற்றுகையிட்ட நிலையில் சேக் ஹசீனா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவுக்குத் தப்பிப் பறந்து சென்றார்.
அவர் ஆட்சியின்போது நடந்த போராட்டங்களில் இராணுவத்தினராலும் காவல்துறையினராலும் 1400 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. அமைப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் மீது கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்தவும், கண்டவுடன் சுடவும் சேக் ஹசீனா உத்தரவிட்ட ஒலிப்பதிவு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள சேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி இந்த ஒலிப்பதிவு தவறான உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.



