
கௌஹாத்தி: அசாம் மாநிலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி 400 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றும் இது தான் அளிக்கும் உத்தரவாதம் என்றும் கூறினார்.
நல்பாரி தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியான அசாம் கணபரீட்சத் வேட்பாளரை ஆதரித்துப் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
” பிகு பண்டிகை நாளில் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். இன்று ராம நவமியும் கூட. 500 ஆண்டுகளுக்குப் பின்னர் ராமர் திரும்பி இருக்கிறார். இன்று நடைபெறும் இந்த நிகழ்ச்சி முதல் மூன்று அடுக்கு பொதுக்கூட்டமாக அமையும்.
ஜூன் 4-ஆம் தேதி என்ன நடைபெறும் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. அன்று 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். மோடியின் உத்தரவாதத்துடன் நான் வந்திருக்கிறேன். அதாவது எனது உத்தரவாதத்திற்கு உத்தரவாதம் அளிப்பதாகும்.
கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் நான் நம்பிக்கையுடன் (டிரஸ்ட் அண்ட் ஹோப்) வந்தேன். இன்று நான் அசாம் மண்ணிற்கு உத்தரவாதத்துடன் வந்திருக்கிறேன் மோடியின் உத்தரவாதம் என்றால் ஒரு உத்திரவாதத்தை நிறைவேற்றும் உத்தரவாதம் ஆகும்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கொள்கைகளை நிறைவேற்றுவதில் எந்தவித பாரபட்சமும் காட்டப்படுவதில்லை. திட்டங்களின் பயன்கள் நாட்டு மக்கள் அனைவரையும் சென்று அடைகிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் மூன்று கோடிக்கும் அதிகமான வீடுகள் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டிக் கொடுக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அனைவருக்கும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடரும்.
எழுபது வயது தாண்டிய முதியவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை செலவுகளை அவர்களுடைய மகனான நான் வழங்குவேன். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் அனைவருக்கும் 5 லட்சம் ரூபாய் அளவுக்கு இலவச சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்படும். இது பாரபட்சமின்றி அனைத்து முதியோர்களுக்கும் செயல்படுத்தப்படும்.
வட கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறது. ஆனால் நான் அந்தப் பகுதியில் அமைதியும் பாதுகாப்பும் நிலவ பாடுபட்டு வருகிறேன். கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யத் தவறியதை பத்து ஆண்டுகளில் மோடியாகிய நான் செய்து இருக்கிறேன். ஜாகிரோட் பகுதியில் ரூ. 27 ஆயிரம் கோடி செலவில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கத் திட்டம் நிறைவேற்றப்படும்.
காங்கிரசுக்கு அளிக்கப்படும் வாக்குகள் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு உதவாது. அதே நேரத்தில் பாஜகவுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் இந்தியாவௌ வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற உதவி செய்யும்”.
இவ்வாறு மோடி கூறினார். மாலையில் அகர்தலாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றிலும் பங்கேற்று மோடி பேசினார்.


