இயேசு கிறிஸ்துவின் உன்னத போதனைகளை நினைவுகூருவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கிறிஸ்வர்களால் இறைவனாக போற்றப்படும் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான இன்று கிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துவர்களின் முக்கியமான பண்டிகை நாளான இன்று, உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்து, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மேலும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.. இதையொட்டி அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதோடு, இயேசு பிறந்ததை சித்தரிக்கும் வகையில் ஆட்டு கொட்டகையுடன் கூடிய குடிலும் அமைக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி: உலகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கிறிஸ்தவ மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில், “அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இந்தப் பண்டிகைக் காலம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும், செழிப்பையும் தரட்டும். கிறிஸ்துமஸ் விழாவின் அடையாளங்களான நல்லிணக்கம் மற்றும் மனிதாபிமானத்தை போற்றுவோம்.
அனைவரும் மகிழ்ச்சி மற்றும் உடல்நலத்துடன் இருக்கும் உலகை நோக்கிப் பயணிப்போம். இயேசு கிறிஸ்துவின் உன்னத போதனைகளை நாம் நினைவுகூருவோம்” என்று தெரிவித்துள்ளார்.

