கொடைக்கானல் ஏரியில் 6 டன் மதுபாட்டில்கள் அகற்றம்!

Advertisements

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் நகருக்கு அடையாளமாக விளங்கி வருவது நட்சத்திர ஏரியாகும். 3 மீட்டர் ஆழம் கொண்ட இந்த ஏரி கடந்த 1863ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏரியில் சுற்றிப்பார்ப்பதற்காகப் படகு சவாரியும் செய்யப்பட்டுள்ளது. 76 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை ஒட்டி 5 மீட்டர் நீளமுள்ள சாலை அமைக்கப்பட்டு அதில் நடை பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களின் சொந்த பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஏரி சுதந்திரத்துக்கு பிறகு ஏரியின் உரிமை 1950ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை மீன் வளத்துறைக்கு வழங்கப்பட்டது.

பின்னர் கொடைக்கானல் நகராட்சிவசம் ஏரி ஒப்படைக்கப்பட்டது. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் விரும்பிப் படகு சவாரி செய்யும் இடமாக இருப்பதால் அனைத்து நாட்களிலும் இங்குக் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

சீசன் காலங்களில் இங்குப் படகு போட்டியும் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

சுற்றுலா தலமான கொடைக்கானலில் மது குடிக்கும் பயணிகளால் காலி பாட்டில்கள் வீசப்பட்டு வந்தன. இதனால் வன விலங்குகள் பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழல் மாசுபடும் நிலை உருவானது.

இதனைக் கருத்தில் கொண்டு கொடைக்கானலில் காலி மதுபாட்டில்களை சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடையிலேயே திருப்பிக் கொடுத்து ரூ.10 பெற்றுக் கொள்ளும் நடைமுறையும் நீதிமன்ற உத்தரவுப்படி நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது.

இதனால் மூலம் உள்ளூர் குடிமகன்கள் காலி மது பாட்டிலை திரும்பக் கொடுத்துப் பணத்தை பெற்று வருகின்றனர். ஆனால் ஏரியைச் சுற்றி மது அருந்தும் குடிமகன்கள் பாட்டில்களை ஏரியில் வீசிச் செல்வது தொடர்கதையாக உள்ளது.

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளும் ஏரியில் சேர்வதால் மாசடைந்து வந்தது. தினந்தோறும் நகராட்சி தூய்மை பணியாளர்கள்மூலம் சாலையோரம் கிடக்கும் மது பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டாலும் ஏரியைத் தூய்மையாக வைத்திருக்கும் முயற்சியாக நகராட்சி சார்பில் 50 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள்மூலம் கடந்த 2 மாதங்களில் 6 டன் அளவுக்குக் காலி மது பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் ஏரியைச் சுற்றி அமர்ந்து மது குடிக்கும் குடிமகன்கள் பாட்டிலை ஏரியில் வீசிச் சென்று விடுகின்றனர்.

மேலும் காருக்குள் அமர்ந்து மது குடிக்கும் குடிமகன்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அது போன்ற நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தபோதிலும் முழுமையாகத் தடுக்க முடிவதில்லை. இதுகுறித்து நகராட்சி ஆணையர் சத்தியநாதன் தெரிவிக்கையில், காலி மது பாட்டிலை அகற்றுவது சவாலான பிரச்சனையாக உள்ளது.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விடுதி அறைகளில் வைத்து மது குடிப்பதோடு தாங்கள் சுற்றிப்பார்க்கும் இடங்களிலும் அதனை ரகசியமாக எடுத்து வந்து குடிக்கின்றனர்.

நகராட்சி சார்பில் 50 பேர் நியமிக்கப்பட்டு ஏரியிலிருந்து கடந்த மாதங்களில் மட்டும் 6 டன் மது பாட்டில்கள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் காலி மதுபாட்டில்கள் ஏரியில் கிடக்கும் என்று நம்புகிறோம். அவற்றை அகற்றும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *