தமிழ்நாட்டில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக் கடைகளின் எண்ணிக்கை குறித்துத் தவெக அரசு வெள்ளையறிக்கை வெளியிடுமா? என்று மாநிலப் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வினவியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் மதுக் கடைகளை மூடிவிட்டதாக ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு தம்பட்டம் அடித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். மூடப்பட்ட மதுக்கடைகளின் முகவரிகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதுவரை வெளியிடப்படாததையும். அந்தக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளதா? என்ற கேள்விக்கும் பதில் இல்லாததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய டாஸ்மாக் மதுக்கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கான பதில் கிடைக்காததையும் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தத்தில் மூடப்பட்டதாகக் கூறிய 717 டாஸ்மாக் மதுக்கடைகள் பற்றி எது கேட்டாலும், “அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அணுகவும்” என்றே ஒரே பதில் மட்டும் தான் RTI இடமிருந்து கிடைத்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளின் முழு விவரங்களையும், முகவரிகளையும், அங்குப் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப் பணிகள் குறித்தும் வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.



