Nagercoil: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிர் ஊசல்!

Advertisements

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…

நாகர்கோவில்: நாகர்கோவில் தட்டான் விளை பெருமாள் நகரை சேர்ந்தவர் பிரவீன் (வயது 30). இவரது மனைவி ரூபா (28). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தையும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. பிரவீன் மர வியாபாரம் செய்து வருகிறார். இவருக்குக் கடந்த சில நாட்களாகத் தொழிலில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கினார். கடன் கொடுத்தவர்கள் பிரவீனுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர்.

ஆனால் அவரால் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதுகுறித்து மனைவி ரூபாவிடம் தெரிவித்தார். இதனால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்தனர். நேற்று பிரவீன் விஷ மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார். அதனை இரவில் குழந்தைகளுக்குக் கொடுத்தனர். பின்னர் பிரவினும், ரூபாவும் விஷம் குடித்தனர்.விஷம் குடித்த பிறகு பிரவீன் வீட்டிலிருந்து கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்குத் திரண்டனர்.

இதுகுறித்து நேசமணி நகர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கணவன் மனைவி, 2 குழந்தைகளும் மயங்கிய நிலையில் ஒரு அறையில் கிடந்தனர். இதைப் பார்த்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிரவீன் அவரது மனைவி ரூபா மற்றும் 2 குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அவரது வீட்டில் இருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்தக் கடிதத்தில் தொழிலில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. இதனால் ரூ.20 லட்சம்வரை கடன் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.

ஆனால் பணத்தை திரும்பக் கொடுக்க முடியவில்லை. இதனால் இந்த முடிவை எடுத்துக் கொண்டதாகக் குறிப்பிட்டு இருந்தனர். இது தொடர்பாகப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நேசமணி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *