
நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையில் விசாரணை கைதி திடீரென உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைக்குளத்தில் கடந்த 9-ஆம் தேதி தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த சபரி வர்மனை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதில், உடற்கூறாய்வு அறிக்கை வெளியான பிறகே இறப்பிற்கான காரணம் உறுதி செய்யப்படும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் காவல்துறையினர் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விசாரணை கைதி சபரிவர்மன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.



