BJP : பாஜகவின் தேசிய தலைவரை தேர்வு செய்வதில் குழப்பம்!

Advertisements

மத்தியில் ஆளும் பாஜகவின் அடுத்த தேசிய தலைவரைத் தேர்வு செய்வதில் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஏனெனில் கடந்த சில மாதங்களாகப் பாஜக தேசிய தலைவர் தேர்வில் நீடிக்கும் இழுபறி மாறி மாறித் தள்ளி வைத்து வருகின்றனர். ஜே.பி.நட்டாவிற்கு அடுத்தபடியாக யார் தேர்வு செய்யப்படுவார்  என்ற எதிர்பார்ப்பு  அக்கட்சியில் எழுந்துள்ளது.

மத்திய அமைச்சராக உள்ள  ஜே.பி.நட்டா பாஜகவின் தேசிய தலைவராகப் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் 2023ஆம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் 2024 மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டு நீட்டிக்கப்பட்டது. இதில் சற்று சறுக்கலை சந்தித்தாலும் மத்தியில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டனர். அதுவும் தொடர்ந்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.  தேர்தல் முடிந்து ஓராண்டை கடந்துவிட்ட நிலையில்  புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான காலம் வந்திருக்கிறது. இருப்பினும் அக்கட்சியில் அதிரடியாக வேலைகள் நடப்பது போன்று தெரியவில்லை. சமீபத்திய தகவலின் படி, ஜூன் 4வது வாரத்தில் பாஜகவிற்கு புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்பட்டு விடுவார் என்கின்றனர்.  எதற்காகக் கால தாமதமாகி வருகிறது என்ற கேள்வி பலரிடம் எழுகிறது. இதன் பின்னணி குறித்து விசாரிக்கையில், மாநில பாஜகவிற்கு தலைவர்களைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா ஆகியவற்றுக்கு மாநிலத் தலைவர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்னும் நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதேபோல் உட்கட்டமைப்பு ரீதியில் நிர்வாகிகள் நியமனமும் நிலுவையில் இருப்பதாகக் கூறுகின்றனர். இவை அனைத்தும் முடிந்ததும் தேசிய தலைவருக்கான தேர்வு நடைபெறும். தற்போது திரை மறைவில் முக்கிய ஆலோசனைகள் நடந்து வருகின்றன. பாஜக தேசிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் புது ரத்தம் பாய்ச்ச முடியும். இந்தியாவில் மிகவும் பலம் பொருந்திய கட்சியாகத் திகழும் பாஜக, அடுத்த அடியை எடுத்து வைக்க மிகக் கவனமாகக் காய்களை நகர்த்தி வருகின்றனர்.புதிய தலைவரின் வருகை என்பது நடப்பாண்டு பீகார் சட்டமன்ற தேர்தல், 2026ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல், 2029 மக்களவைத் தேர்தல் ஆகியவற்றை நோக்கிய பயணத்தில் முக்கிய செயல்திட்டங்களை வகுக்கக்கூடிய நபராக இருக்க வேண்டும்.  எனவே தான் விரைவாகத் தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே நீடித்து வருகிறது. பாஜகவை பொறுத்தவரை டெல்லியில் தான் அதன் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க வேண்டும் என்று கருதுகிறது.

குறிப்பாக மோடி அலை என்பது 2014 ல் தொடங்கி தற்போது வரை நாடு முழுவதும் பெரிதும் பேசுபொருளாக இருக்கிறது. அப்படியான பிம்பத்தைக் கட்டி எழுப்பியதில் பலருக்கும் பங்குண்டு. தற்போது மோடிக்கு வயதாகி விட்டதால் அடுத்த தலைமுறை தலைவர்களைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. இவர்கள் தலைமையின் கீழ் கட்சி அடுத்த 20, 30 ஆண்டுகளுக்கு வெற்றி பாதையில் பயணிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் அக்கட்சியினர்.இதற்காகப் பல்வேறு மாநிலங்களிலிருந்து இளம் தலைவர்களை அடையாளம் கண்டு வைத்திருக்கின்றனர். இவர்களுக்கு வழிகாட்டும் ஒற்றை தலைமையாகப் பல்வேறு சவால்களைச் சமாளித்து கட்சியைக் கொண்டு செல்ல வேண்டிய நபர் வர வேண்டும் என்கின்றனர். இதற்கான வேலையில் பிரதமர் மோடி, அமித்ஷா, பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் வழிகாட்டப் போகும் புதிய தலைவர் யார்,  தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை பாஜக தேசிய தலைவராகத் தேர்வு செய்யவும் வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. ஒரு வேளை  அண்ணாமலை தேசிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டால் பாஜகவை மேலும் அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்வார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அடுத்த சில வாரங்களில் புதிய தலைவர் யார் என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

-செய்தித்தொகுப்பு : விஜயபாலன் Gem tv

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *