
விளாத்திகுளம் அருகே மூதாட்டியின் உயிரை பறித்து நாடகமாடிய உறவுக்கார இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் மிட்டாவடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணன், கலாவதி தம்பதியர். இதில், கலாவதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அங்கன்வாடி மேற்பார்வையாளராக இருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்று வீட்டிலிருந்து வந்துள்ளார்.
இவர்களுக்கு ராகேஷ், சதீஷ், சுலோக்சனா ஆகிய மூன்று பிள்ளைகள் திருமணம் ஆகிய நிலையில் சென்னையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி அதிகாலை வீட்டின் வாசலில் கணவர் கண்ணன் படுத்திருந்தபோது, வீட்டின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த கலாவதியை மர்ம் நபர்கள் கடுமையாக தாக்கி அவரது உயிரை பறித்தனர்.
இதன் பின்னர், அவரிடமிருந்து 15 பவுன் தங்க நகைகள் திருடிச் சென்றுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக மிட்டாவடாமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருமேனி முருகன் செல்ஃபோனில் காடல்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கலாபதியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தலைமையில் இரண்டு தனிப்படை காவல்துறையினர் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து கலாவதியின் வீட்டின் அருகே உள்ள ஒரு சிசிடிவி காட்சியை காவல்துறையினர் ஆய்வு செய்ததன் பேரில், அதே கிராமத்தை சேர்ந்த திருமேனிமுருகனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, வீட்டின் பின்புறமாக சென்று கடப்பாரை கம்பியால் கலாவதியின் கழுத்தில் குத்தி அவரது உயிர்பறித்ததாகத் தெரிவித்தார். 10 பவுன் தங்க நகை எடுத்து சென்று விட்டு, ஊரின் கிழக்குப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் தங்க நகைகளை புதைத்து விட்டதாகக் கூறினார். இதன் பின்னர் அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உறவுக்கார இளைஞர் மூதாட்டியின் உயிரை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



