முதுபெரும் கம்யூனிஸ்டுத் தலைவர் சங்கரய்யா உடல்அரசு மரியாதையுடன்30 குண்டுகள் முழங்கத் தகனம் செய்யப்பட்டது.
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா. சுதந்திர போராட்ட தியாகியான இவர், சென்னை குரோம்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். முதுமை காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்த சங்கரய்யாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சளி மற்றும் இருமல் தொல்லையால் கடந்த சில நாட்களாக அவர் அவதிப்பட்டு வந்தார்.
இதனையடுத்து கடந்த 13-ந் தேதி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சங்கரய்யா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை 9.30 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 102. இதுகுறித்து தகவல் அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று சங்கரய்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
நேற்று மாலை 4.30 மணி அளவில் அவரது உடல் சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் சங்கரய்யா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சங்கரய்யாவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி, சங்கரய்யாவின் உடல் இன்று காலை 10.30 மணி அளவில் கட்சி அலுவலகத்திலிருந்து ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டது. பெசன்ட் நகர் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. 30 குண்டுகள் முழங்கச் சங்கரய்யாவுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதன் பின்னர் சங்கரய்யாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.