மும்பையில் பெண் மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்து பணம் கேட்டு மிரட்டிய நண்பனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்ட்ராவின் தலைநகரமாகத் திகழ்வது மும்பை. தெற்கு மும்பையில் அமைந்துள்ளது காம்தேவி காவல் நிலையம். இந்தக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் மருத்துவர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பேட்மிண்டன் ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
பேட்மிண்டன் ஆடுவதற்காக இவர் டார்டியோ பகுதிக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அங்கு அவருக்கு ஆண் நண்பர் பழக்கமாகியுள்ளார். பெண் மருத்துவருக்குத் திருமணமாகியுள்ளது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரும் மனைவியும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர். இந்தச் சூழலில், இந்த ஆண் நண்பர் பெண் மருத்துவருடன் நண்பராகப் பழகி வந்துள்ளார்.
தன்னுடைய குடும்ப விவகாரங்களையும் அவரிடம் நட்பாகப் பகிர்ந்துள்ளார். இந்தச் சூழலில், இதுபற்றிப் பேசுவதற்காக அந்தப் பெண் மருத்துவரை வருமாறு அந்த நண்பர் அழைத்துள்ளார். அவரும் இதுதொடர்பாகப் பேசுவதற்காகச் சென்றுள்ளார். அப்போது அவர் குளிர்பானத்தில் அவர் ஏதோ கலந்துள்ளார். இதனால், சிறிது நேரத்தில் பெண் மருத்துவர் சுய நினைவை இழந்துள்ளார். இதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த இளைஞர் அந்தப் பெண் மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்தச் சூழலில், கடந்த அக்டோபர் மாதம் அந்தப் பெண் மருத்துவரிடம் அவர் பணம் கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண் மருத்துவர் தர மறுத்துள்ளார். இதையடுத்து, அந்தப் பெண் மருத்துவரிடம் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்த போட்டோ மற்றும் வீடியோவை இணையதளத்தில் பதிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து அந்த இளைஞர் அந்தப் பெண் மருத்துவருக்குப் பணம் கேட்டு மிரட்டல் விடுத்து வந்ததால், அவர் கடுமையான மன உளைச்சல் அடைந்துள்ளார். இதையடுத்து, அவர் காம்தேவி காவல் நிலையத்தில் இந்த விவகாரம் தொடர்பாகப் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, பெண் மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய 38 வயதான அந்த நபரை ஐ.பி.சி. 376 மற்றும் 384 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
நட்பாகப் பழகிய பெண் மருத்துவரை நண்பரே மயக்க மருந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததுடன் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.