
சிவகங்கை மடப்புரம் அஜித்குமார் காவல் கொட்டடியில் கொல்லப்பட்டதாக சிபிஐ அறிக்கையில் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் நாகேந்திரன், திமுக அரசு இரத்தம் தோய்ந்த கரங்களுடன் இந்தத் தேர்தலைச் சந்திக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாரைக் காவல்துறையினர் அடித்துக் கொன்றுவிட்டதாகவும், நிகிதா அளித்த புகாரில் உண்மையில்லை என்றும் உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஒன்றுமே இல்லாத வழக்கில் அப்பாவி ஒருவரைக் காவலர்கள் அநியாயமாக அடித்துக் கொன்றுவிட்டதாக நீதிபதிகள் காட்டமாகக் கூறியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடப்பது மனிதநேயமற்ற கொடுங்கோல் ஆட்சி என்பதற்கு இதுவே சான்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை குறித்துப் புகாரளிக்க வரும் பெண்களிடம் தனிப்பட்ட முறையில் துருவித் துருவி விசாரித்து அவர்களைத் தர்மச்சங்கடத்திற்கு ஆளாக்கும் திமுகவின் காவல்துறை, அஜித்குமார் மீதான புகாருக்கு மட்டும் அதிரடி காட்டியதன் காரணம் என்ன? என்று வினவியுள்ளார்.



