
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஹெச். சி. எல். நிறுவனத் தலைவர் சிவநாடார், தன் தாய் வாமசுந்தரி பெயரிலான அறக்கட்டளை மூலம் வழங்கிய 206 கோடி ரூபாய், அறநிலையத் துறை ஒதுக்கிய 100 கோடி ரூபாய் என மொத்தம் 306 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழிபாட்டுக்கான வசதிகள், பக்தர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டன.
இதையடுத்துக் குட முழுக்கு விழா இன்று நடைபெற்றது. சாரம், படிகள் ஆகியவற்றின் மூலம் கோபுரத்தின் உச்சிக்குச் சென்ற பூசாரிகள் குடங்களுக்குப் புனித நீரை ஊற்றிக் குடமுழுக்குச் செய்தனர். அப்போது பக்தர்கள் கந்தா கடம்பா அரோகரா என விண்ணதிர முழங்கினர். அதன்பின்னர் அங்குக் கூடியிருந்த பக்தர்கள் மீது டிரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
இந்த விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
