நாமக்கல் அருகே சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த லாரிகள் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல்: நாமக்கல்-சேலம் சாலை முதலைப்பட்டி பகுதியில் துணி லோடு ஏற்றியும், லோடு இல்லாமலும் 2 லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தது. இதற்கு அருகிலேயே டேங்கர் லாரி மற்றும் ஒரு காரும் நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் இந்த லாரிகள் மற்றும் காரில் தீடீரென தீப்பிடித்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வெகுநேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் லாரிகள் முற்றிலும் எரிந்து சேதமானது.
இதுகுறித்து தகவல் அறிந்து நாமக்கல் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் இதுபற்றி வழக்கு பதிவு செய்து, எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் லாரிகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.