Bengaluru Rameshwaram Cafe Blast: குண்டுவெடிப்பு சம்பவம்.. தமிழக போலீசார் உஷார்!

Advertisements

சென்னை: பெங்களூருவில் ராமேசுவரம் கபே ஓட்டலில் நேற்று நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து தென் மாநிலங்களில் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்திலும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்திலும் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

குறிப்பாகச் சென்னை மாநகரில் நேற்று மாலையிலிருந்து இரவு முழுவதும் விடிய விடிய வாகன சோதனை தீவிரமாக நடத்தப்பட்டது.லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக யாரேனும் ஊடுருவி இருக்கிறார்களா? என்பது பற்றிக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகர பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கியுள்ள வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா? என்பதை கண்டறிய அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த போலீசார் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் எழும்பூர், திருவல்லிக்கேணி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய பகுதிகளில் உள்ள லாட்ஜூகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது அங்குத் தங்கி இருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெங்களூருவில் நடந்துள்ள குண்டு வெடிப்புச் சம்பவத்தைப் போன்று தென் மாநிலங்களில் வேறு எங்கும் நடந்துவிடக் கூடாது என்பதில் மாநில போலீசார் முழுமையான கவனத்தோடு செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளப் போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளனர்.பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *