
பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை இப்போதே இருக்கும் 543 தொகுதிகளிலும் அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பிரதமர் மோடி தொகுதி மறுவரையறை குறித்து பேசியது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 12 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் எதையும் சுட்டிக்காட்ட இயலாத, பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு ஆற்றவேண்டிய ஓர் அதிகாரப்பூர்வ உரையில், பொய்கள் நிறைந்த ஒரு அரசியல் பிரச்சாரப் பேச்சாக மாற்றியுள்ளார் எனக் குறிப்பிட்டார்.
பிரதமர் தனது உரையில் காங்கிரஸை 59 முறை குறிப்பிட்டுள்ளார் என்றும் ஆனால், பெண்களைப் பற்றி சில முறையே பேசியுள்ளார் என்றும் தெரிவித்தார். பெண்களுக்கு பாஜக முன்னுரிமை அளிக்கவில்லை, காங்கிரஸையே குறிவைக்கிறார்கள் என்று விமர்சித்தார். பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை இப்போதே இருக்கும் 543 தொகுதிகளிலும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் அதை 2029 ஆம் ஆண்டிற்கு தள்ளிப்போடுவது பெண்களை ஏமாற்றும் செயல் என்று குற்றம் சாட்டினார். 2010 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் மாநிலங்களவையில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது என்றும் ஆனால் பாஜக அதை மக்களவையில் நிறைவேற்ற விடாமல் தடுத்தது என்றும் தெரிவித்ததார். குற்றபதிவேட்டின்படி, பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ளன என்று கூறினார்.





