
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே ஒழுகரையில் பழங்குடியினத் தொழிலாளியைத் தாக்கிய இருவரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த சதாவரத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குமார். இவர் ஐந்தாண்டுகளுக்கு மேலாகக் கருவேப்பம்பட்டி மடத்தில் குடும்பத்தோடு குடியிருந்து வருகிறார்.
ஒழுகரையில் உள்ள பழனி என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், செங்கல் சூளைக்கு அருகிலுள்ள நிலத்தில், வைக்கோல் கட்டுகள் அடுக்குவது தொடர்பாக முருகன் என்பவருக்கும், குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் வாக்குவாதம் முற்றியதால் முருகனும் அவர் சகோதரர் அருணாசலமும் சேர்ந்து பனை மட்டையால் குமாரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த குமாரை மீட்டு அப்பகுதி மக்கள் உத்தரமேரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்த புகாரையடுத்து விசாரணை மேற்கொண்ட உத்தரமேரூர் காவல்துறையினர், முருகனையும் அருணாசலத்தையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.



