
புதுடெல்லி:நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் தலைவர்கள் ஒருவரையொருவர் வாழ்த்துவது வழக்கம் என்றாலும், இன்று சோனியா காந்தியிடம் பிரதமர் மோடி உரையாடியது நாடாளுமன்றத்தில் கவனம் பெற்றுள்ளது. அப்போது சோனியா காந்தியின் உடல் நலம் குறித்து பிரதமர் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் சென்ற விமானம் 18-ம் தேதி இரவு போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த நிலையில், ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், சோனியா காந்தி ஆக்சிஜன் முக கவசம் ஒன்றை அணிந்தபடி காணப்படுகிறார். அதன் தலைப்பில், கருணையின் வடிவம் அழுத்தத்தின் கீழ் உள்ளது தாயே என்று அவர் பதிவிட்டு இருந்தார்.
இந்த சூழலில் மக்களவையில் பிரதமர் மோடி, சோனியாவின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு சற்று முன்பு இந்த சுருக்கமான உரையாடல் நடைபெற்றது. அவை தொடங்கியவுடன், பிரதமர் சோனியா காந்தியிடம் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அதற்கு சோனியா காந்தி, “நான் நலமாக இருக்கிறேன்” என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது. மேலும் மணிப்பூர் வன்முறைகள் குறித்து விவாதம் நடத்துமாறு பிரதமரிடம் சோனியா காந்தி வலியுறுத்தியதாக காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.


