Mexican mint: கற்பூரவள்ளி துவையல்!

Advertisements

 சளி, வறட்டு இருமலை போக்கும் கற்பூரவள்ளி துவையல்.

கற்பூரவள்ளி இலையை நாம் ஓமவள்ளி இலை என்றும் அழைப்போம். பலரது இல்லங்களிலும் தோட்டத்தில் இந்தச் செடியை வளர்ப்பார்கள். சளி, வறட்டு இருமல், மூக்கடைப்பு போன்றவற்றிற்கு இந்த இலையைப் பயன்படுத்துவார்கள். இது மட்டும் அல்லாமல் சிறுநீரகத்தில் சேரக்கூடிய உப்பைக் கரைக்கவும் இது பயன்படுகிறது.
மேலும் தோல் நோய்களையும் சரி செய்வதற்கு சிறந்த மேல்பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது. அது மட்டுமல்லாமல் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும், அஜீரண கோளாறுகளைச் சரி செய்வதற்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கும் இந்தக் கற்பூரவள்ளி இலை பயன்படுகிறது. இந்தக் கற்பூரவள்ளி இலையை வைத்து எப்படி சத்தான துவையல் செய்வது என்று தான் இந்தச் சமையல் குறிப்புகுறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்:

கற்பூரவள்ளி இலை – 15
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 2 டீஸ்பூன்
வரமிளகாய் – 4
தேங்காய் – 1/2 மூடி
இஞ்சி – 1 இன்ச்
பூண்டு – 6 பல்
சின்ன வெங்காயம் – 10
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். கடாய் நன்றாகக் காய்ந்ததும் அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் நல்லெண்ணெயாக இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. எண்ணெய் நன்றாகக் காய்ந்த பிறகு அதில் கடுகு, உளுந்தை சேர்க்க வேண்டும். உளுந்து சிவக்க ஆரம்பிக்கும்பொழுது அதில் வரமிளகாயை சேர்க்க வேண்டும்.

வர மிளகாய் சிவந்த பிறகு பொடியாக நறுக்கிய தேங்காய், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் புளி இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தபிறகு அதில் கற்பூரவள்ளி இலையையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
கற்பூரவள்ளி இலை மிருதுவாக மாற ஆரம்பித்ததும், அடுப்பை அணைத்துவிட்டு அதில் பெருங்காயத்தூளை சேர்த்து நன்றாக ஆற வைக்க வேண்டும். ஆறவைத்த இந்தப் பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டுக் கொரகொரவென்று துவையல் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தத் துவையலை ரசம் சாதம், கஞ்சி போன்றவற்றிற்கு உபயோகப்படுத்தலாம். சிறு குழந்தைகளுக்குச் சாப்பாட்டில் பிணைந்து கொடுத்தும் உண்ண வைக்கலாம்.
இதில் சிறிது நீரை ஊற்றிக் கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டுத் தாளித்தால் டிபனுக்கு சட்னி ஆகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். நம் உடலுக்குப் பல அற்புதமான நல்ல பயனைத் தரக்கூடிய கற்பூரவள்ளி இலையை அப்படியே உண்பதை பல குழந்தைகள் தவிப்பார்கள். அந்தச் சூழ்நிலையில் இப்படி துவையலாகச் செய்து கொடுப்பதன் மூலம் அவர்களை அறியாமலேயே அவர்கள் கற்பூரவள்ளி இலையைச் சாப்பிட்டுவிடுவார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *