Advertisements

மேகதாது அணை கட்டுவதற்கு ஒரு செங்கலை கூட வைக்க கூடாது என்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மிக தெளிவாக இருக்கிறது என்றும், அதற்காக தொடர்ந்து போராடுவோம் என்றும் சென்னையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் உருவத்துடன் கூடிய மணல் சிற்பத்தை, உலகப் புகழ்பெற்ற மண் சிற்பி கஜேந்திரன்-ஏழுமலையான் என்பவரால் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மக்களின் பார்வைக்காக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் மாநில தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கே.எஸ் .அழகிரி, பிரவீன் சக்கரவர்த்தி, விஜய் வசந்த், மற்றும் அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, காமராஜரின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று பள்ளி கல்வி என்றும், பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகள், தேவையில்லாத ஆய்வுகள், சினிமா நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருப்பதை வரவேற்கிறோம் என்றும் தெரிவித்தார். மேலும், மேகதாது அணை என்பது தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனை என்றும், எனவே தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல், மத்திய அரசு ஒப்புதல் கொடுக்கக் கூடாது என்றும், மேகதாது அணை கட்டுவதற்காக, நரேந்திரமோடியின் அனுமதி பெறுவதற்காக, கர்நாடகாவில் உள்ள பாஜக தலைவர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
Advertisements


