
திருச்சியில் முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு பேசிய மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் தவெகவை ஆதரிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாக தெரிவித்தார். மேலும், மதிமுக தனி இயக்கமாக செயல்பட்டு வருவதாகவும், திமுக கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் என 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் இன்று விஜய் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க சென்னையில் இருந்து திருச்சி புறப்பட்டார். சென்னை சிட்டி கார்டனில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த அவர், சத்திரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள தூய வளனார் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் முதல்வர் விஜய்க்கு ஏராளமான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ நேரில் வந்து முதல்வர் விஜய்யை வரவேற்றார். அப்போது விஜய்க்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து சிரித்தபடி உற்சாகமாக காணப்பட்டார்.
இதனையடுத்து துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், துரதிர்ஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் தவெகவை ஆதரிக்க முடியவில்லை.. நாங்கள் தனி இயக்கம், திமுக கூட்டணியில் தொடர்வதா என கேட்கிறீர்கள்.. திமுகவில் தொடர்வதா இல்லை வெளியேறுவதா என்பதை எங்கள் பொதுக்குழுவில் முடிவு செய்வோம்.
சிறு, குறு விவசாயிகளுக்கு விஜய் பயிர்க்கடன் தள்ளுப்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால் அதனை விஜய் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி வெளியிடவில்லை என எல்லாரும் கேட்கின்றனர். முதல்வர் விஜய் தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவே என்று சொல்லியிருக்கிறார். எனவே அதற்கு பிறகு விஜய் இது குறித்து அறிவிப்பினை வெளியிட வாய்ப்பு உள்ளது.
இதற்கு முன்பு இருந்த அரசு கூட மகளிர் உரிமைத் தொகையை உடனே அமல்படுத்தவில்லை. கொஞ்சம் கால அவகாசம் தேவைப்பட்டுச்சு.. கிட்டத் தட்ட மூன்று வருஷம் கழிச்சு தான் மகளிர் உரிமைத் தொகையினை கொடுத்தார்கள். எனவே இதனை குற்றம் சொல்ல முடியாது. அன்றைக்கும் இதே நிதி நிலைமை தான் பிரச்சினையாக இருந்தது. கடன் சுமை இருந்தது.
அதன்பிறகு 1.31 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை கொடுத்தனர். விஜய்யும் இப்போது தான் வந்து இருக்கிறார். உடனடியாக அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சொன்னால் எப்படி.. நாங்கள், எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் துரதிருஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டோம். இப்போது எங்களுக்கு தவெகவுக்கு ஆதரவு கொடுக்கக் கூடிய சூழல் இல்லை.
ஆனால் பிற இயக்கங்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். மக்கள் கொடுத்த தீர்ப்புப் படி இந்திய அரசமைப்பு சட்டத்தின் படி பெரும்பான்மை பெற்ற விஜய்யை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும்.
இது தான் மக்கள் கொடுத்த தீர்ப்பு. ஆறு மாதம் முதல் ஒரு வருஷம் வரை டைம் கொடுக்க வேண்டும். அவர்கள் படிப்படியாக செய்வார்கள் என்று நம்புவோம்” என்று கூறினார். துரை வைகோவின் இந்த பேச்சு, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேற உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பும் விதமாக அமைந்துள்ளது.


