
சென்னை:
சென்னையில் நடந்த அரசு விழாவில் 40 ஆண்டாய் கட்சியை வளர்க்கிறோம் என்று திமுக நிர்வாகிகள் வாக்குவாதம் செய்தததால் மாநகராட்சி மேயர் பிரியா மிரண்டு போனார்.
இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் பரவி வரும் நிலையில் அதன் பின்னணி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகராட்சி மேயராக இருப்பவர் பிரியா. இப்போது அவருக்கு வயது 31 தான் ஆகிறது. திமுகவை சேர்ந்த அவர் இளம் வயதிலேயே சென்னை மாநகராட்சி மேயராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. மேயர் பிரியாவை சுற்றி நிற்கும் திமுகவினர் அவரிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
அந்த வீடியோவில், ‛‛வட்ட செயலாளர், மாவட்ட செயலாளர்கள் கேட்கிறாங்கல்ல… பதில் சொல்லுங்க… 40 வருஷமா கட்சியில இருக்கோம். எங்களுக்கு மரியாதை இல்லையா?” என்று ஒருவர் கேட்கிறார்.
அதற்குப் பிரியாவுக்கு ஆதரவாகச் சிலர் கேள்வி கேட்பவர்களைச் சமாதானம் செய்கின்றனர். ஆனால் அவர்கள் சமாதானம் ஆகவில்லை.
இதையடுத்து பிரியா நேரடியாகப் பேசுகிறார். தன்மீது கோபமான நபரைப் பார்த்து ‛‛அண்ணா நான் இப்போது ஏதாவது சொன்னேனா அண்ணா” என்று சொல்கிறார்.
இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தான் தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோபற்றி விசாரித்தபோது அந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்த விபரம் கிடைத்துள்ளது. அதாவது சென்னை வியாசர்பாடியில் மேயர் மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் இரவு நேர பாடசாலை மையம் மற்றும் மாணவர் திறன் மேம்பாட்டு மைய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காகக் கடந்த 6ம் தேதி மேயர் பிரியா வியாசர்பாடியில் அடிக்கல் நாட்டும் விழாவுக்குச் சென்றார்.
அப்போது மாநகராட்சி சார்பில் அங்குள்ள திமுக நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கோபமான மாவட்ட செயலாளரும், பெரம்பூர் திமுக எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான ஆர்டி சேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் அங்கு வந்து விழாவுக்கு அழைப்பு விடுக்காதது பற்றிக் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்ததும், அதன்பிறகு அவர்கள் அனைவரும் சேர்ந்து பூமிபூஜை நடத்தியதும் தெரியவந்துள்ளது.
