
பெரம்பலூர்:
பெரியாரைத் தொட்டவன் கெட்டான் என்று வார்த்தைகளுக்கான பொருள் ஈரோடு இடைத்தேர்தல் முடிவின் மூலம் கிடைத்திருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சீமான் சொல்லும் கதைகளை இனியும் நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை என்று கூறிய அவர், பெரியாரைத் தொட்ட பின் சீமானின் அரசியல் வாழ்க்கை சரிந்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாகப் பெரியார்குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வந்தார். பெரியார்மீதான கொச்சை விமர்சனத்திற்கு திமுக, திக, பெரியாரிய ஆதரவு அமைப்புகள் கடுமையாகப் பதில் அளித்து வந்தனர்.
ஆனால் சீமானின் கருத்துக்குப் பாஜக மட்டும் தொடர்ச்சியாக ஆதரவு அளித்தது. அதேபோல் பெரியார்மீதான விமர்சனங்களுக்கான ஆதாரங்களையும் சீமான் கடைசி வரை வெளியிடவில்லை.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போதும் கூடத் திமுகவின் திட்டங்களை, செயல்பாடுகளை விமர்சிப்பதை விடவும், பெரியாரை அட்டாக் செய்வதிலேயே சீமான் முழுமையாக ஈடுபட்டார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட் கூட வாங்காமல் தோல்வியடைந்தார்.
திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 1,15,709 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற நிலையில், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி வெறும் 24,151 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
இதனால் பெரியாரை விமர்சித்த சீமான், பெரியாரின் சொந்த ஊரிலேயே படுதோல்வியை சந்தித்துவிட்டதாகத் திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் பிரான எதிர்க்கட்சி போட்டியிடாத போதும் கூட, நாதக டெபாசிட் வாங்கவில்லை.
இதனால் நாம் தமிழர் கட்சி வரும் காலங்களில் மோசமான தோல்வியைச் சந்திக்கும் என்று திமுக ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பெரம்பலூரில் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், “பெரியாரைத் தொட்டவன் கெட்டான்” என்று ஏற்கனவே பலரும் சொல்லி இருக்கிறார்கள். அதன் பொருள் விவரம் தற்போது வெளி வந்துள்ளது. ’
இன்னும் சொல்லப் போனால், சீமானின் அரசியல் வாழ்க்கை பெரியாரைத் தொட்ட பிறகு மெல்ல மெல்ல சரிந்து இன்று அவர் எழுப்பிய பொய்க் கோட்டை மொத்தமாக இடிந்து விழுந்துள்ளது.
இனியும் சீமானின் கதைகளை நம்புவதற்கு, அவர்பின் இருப்பவர்கள் தயாராக இல்லை. இதனால் தான் அவரிடமிருந்து பலரும் விலகி வருகிறார்கள்.
டெல்லி சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை ஒவ்வொரு தொகுதியிலும் அதிகளவிலான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இதனால் இந்த விவகாரம்குறித்து விரைவில் பல விஷயங்கள் வெளி வரும் என்று கருதுகிறேன். மத்தியில் பிரதமராக நரேந்திர மோடி வந்தபின், இந்திய பாஸ்போர்ட்-க்கு மதிப்பு வந்துவிட்டதாகவும், வெளிநாட்டினர் இந்தியா வருவார்கள் என்றும் கதை கட்டினார்கள்.
ஆனால் மோடியின் நெருங்கிய நண்பரான டொனால்டு டிரம்பி அமெரிக்காவின் அதிபராக வந்தபின், ஒரு அவலமான நிலை ஏற்பட்டுள்ளது. பலரும் நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள்.
அதிலும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமாக நாடு கடத்தப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
