
மாரிதாஸ் வெளியிட்ட ஒலிக்கோப்பை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்குவதுடன் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறி ஆ.ராசா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மன்னிப்புக் கேட்க முடியாது என்றும், எந்த நீதிமன்றத்துக்கும் வரத் தயார் என்றும் மாரிதாஸ் பதிலளித்துள்ளார்.
இரண்டாம் தலைமுறைத் தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை சிபிஐ கைது செய்து தில்லி திகார்ச் சிறையில் அடைத்தது. அப்போது தன்னைப் பார்க்கத் திமுகவில் இருந்து யாரும் வரவில்லை என்றும், கனிமொழியைச் சிறையில் அடைத்த பிறகே அவரைப் பார்க்க வந்த அனைவரும் தன்னைப் பார்த்தனர் என்றும் ஆ.ராசா கூறும் ஒலிக்கோப்பை யூடியூபர் மாரிதாஸ் வெளியிட்டுள்ளார். இது திமுகவிலும் தமிழ்நாட்டு அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆ.ராசா தனது வழக்கறிஞர் மூலம் மாரிதாசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் எக்ஸ் தளத்தில் மாரிதாஸ் வெளியிட்டுள்ள ஒலிக்கோப்பையும், இதேபோல் மற்ற உள்ளடக்கங்களையும் நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் கிடைத்ததும் நிபந்தனையின்றி மன்னிப்புக் கோர வேண்டும் என்றும், இந்த ஒலிக்கோப்பு எங்கிருந்து கிடைத்தது, எவ்வாறு எடிட் செய்யப்பட்டது என்ற விவரத்தையும் வெளியிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
தவறினால் நீதிமன்றங்களில் உரிமையியல், குற்றவியல் வழக்குகள் தொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.இந்த வழக்கறிஞர் நோட்டீசைப் பெற்ற பிறகு யூடியூபர் மாரிதாஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ஆ.ராசாவிடம் மன்னிப்புக் கேட்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எந்த நீதிமன்றத்துக்கும் வரத் தயார் என்றும் மாரிதாஸ் கூறியுள்ளார்.



