Manjanathi : “என் இதயத்தின் சிம்பொனி..” இளையராஜாவுடன் இணைந்த மாரி செல்வராஜ்..!

தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் எதார்த்த இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ், தனது அடுத்த 6-வது திரைப்படத்திற்காக முதன்முறையாக இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்துள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு ‘மஞ்சணத்தி’  எனப் பெயரிடப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ க்ளிம்ப்ஸ்  வீடியோவை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

இளையராஜாவின் ’50 ஆண்டு கால இசைப்பயண’ நேரடி இசை கச்சேரியின் போது இந்த அறிவிப்பு முதன்முதலில் மேடையில் பகிரப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள க்ளிம்ப்ஸ் வீடியோவில், மாரி செல்வராஜ் இளையராஜாவின் ஸ்டுடியோவிற்கு நேரில் சென்று அவரிடம் கதையைக் கூறுவதும், அதற்கு இளையராஜா உடனே ஆர்மோனியப் பெட்டியை எடுத்து நேரலையாக மெட்டமைத்துப் பாடுவது போன்ற நெகிழ்ச்சியான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

“என் இதயத்தின் சிம்பொனி… இசைஞானி இளையராஜா சாருடன் என் வாழ்க்கையைச் செதுக்கத் தொடங்குகிறேன்” என மாரி செல்வராஜ் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அறிமுகப் படமான ‘பரியேறும் பெருமாள்’ தொடங்கி கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் காளமாடன் எனத் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் மாரி செல்வராஜின் படங்களில் ‘மஞ்சணத்தி’ என்ற வார்த்தை அல்லது மரம் ஏதோ ஒரு வகையில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றிருக்கும். தற்போது அந்தப் பெயரிலேயே படமே உருவாகி வருவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இத்திரைப்படம் ‘வாழை’ படத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *