
புதுடெல்லி: மணிப்பூரில் இரண்டு பெண்கள் ஆடையின்றி இழுத்துச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரண்டாவது நாளாக இன்று மக்களவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அவை பகல் 12 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது, மணிப்பூர் கலவரத்தில் 2 பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவை, மாநிலங்களவையில் பல்வேறு கட்சிகள் தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மக்களவை கூடியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடியவுடன் மணிப்பூர் பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் அமளிக்கு இடையே பேசினார். “மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசு விவாதிக்கத் தயார். ஆனால் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அமளியில் ஈடுபட்டு அவையை முடக்குகின்றன” என்று கூறினார்.
ஆனாலும் இன்று எதிர்க்கட்சியினர் “ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் சம்பவம் பற்றி விவாதம் நடத்த வேண்டும். மணிப்பூர் சம்பவம் பற்றி பிரதமர் அவையில் பேச வேண்டும்” என்று கூச்சலிட்டனர். மணிப்பூர் விவகாரத்தை விவாதிப்போம் என்ற பதாகையை மக்களவை சபாநாயகர் அருகே எடுத்துச் சென்று முழக்கமிட்டனர். அமளி காரணமாக அவையை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.
மாநிலங்களவையும் ஒத்திவைப்பு: மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

