கருப்பசாமிக்கு நேர்த்திக்கடனாக 2 அரிவாள்கள்! 400 கிலோ எடையில்18 அடி நீளமுள்ள அரிவாளை விரதமிருந்து தயாரித்த தொழிலாளி !

சிங்கம்புணரி: மதுரை அழகர்கோவிலில் உள்ள 18ம் படி கருப்பசாமிக்கு நேர்த்திக்கடனான 18 அடி நீளமுள்ள 2 அரிவாள்கள் சிங்கம்புணரியில் தயாரிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள நாடார்பேட்டை பகுதியில் பட்டறை நடத்தி வருபவர் சேகர். இவர், பல்வேறு கோயில்களுக்கு நேர்த்திக்கடன் அரிவாள்களை, கலைநயத்துடன் பாரம்பரிய முறையில் செய்து தருகிறார். இந்நிலையில், ஜெயங்கொண்ட நிலை கிராமத்தை சேர்ந்த பக்தர்கள், மதுரை அழகர்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பருக்கு 18 அடி நீளமுள்ள 2 அரிவாள்கள் செய்ய ஆர்டர் வழங்கினர்.

இதையடுத்து சுமார் 400 கிலோ எடையுடன் ஒருவார கால உழைப்பில், 2 பிரம்மாண்ட அரிவாள்கள் தயாரிக்கப்பட்டு, அதற்கு வண்ணம் பூசி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து ஆர்டர் கொடுத்தவர்களிடம் நேற்று அரிவாள்கள் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்து அரிவாள் தயாரிப்பாளர் சேகர் கூறுகையில், ‘சிங்கம்புணரி சுற்றுப்புற கிராமங்களில் காவல் தெய்வங்களுக்கு 3 அடி முதல் 18 அடி நீளமுள்ள அரிவாள்களை விரதமிருந்து செய்து, பக்தர்களுக்கு வழங்கி வருகிறோம்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *