“இது என்ன அரசு பணி இல்லையா?” – அமித் ஷாவுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது அலுவல்களைப் புறக்கணித்து நழுவியதை நாடறியும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் ஓடி ஒளிந்தாரே உள்துறை அமைச்சர் அமித்ஷா, இது என்ன ‘அரசுப்பணி’ இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான வன்முறை, மற்றும் தொகுதி மறுவரையறை என எதற்குமே அவையில் நின்று நேருக்கு நேர் பதில் சொல்லப் பயந்தவர் நாடாளுமன்றத்துக்கே வருவதே இல்லையே என்று குற்றம்சாட்டியுள்ளார்.

 

மேலும் அவர், நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் மசோதாக்களின் போதே அந்தப் பக்கம் வராமல் எஸ்கேப் ஆனாரே, அப்போது அது ‘அலுவல் பணி இல்லையெனத் தெரியவில்லையா? என்று வினவியுள்ளார். இது பாஜக அரசின் தோல்விகளை மறைக்க வழக்கம்போல அமித்ஷா செய்யும் ‘நழுவல்’ வேலைதானே  என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக்கத் தெரியாத பாஜகவினர் தங்களுக்கு ‘அலுவல்’ பாடம் எடுப்பது, சின்னபிள்ளைத் தனமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

 

மேலும், “‘காங்கிரசை மக்கள் வெறுக்கிறார்கள்’ என்று பேசும் பாஜகவினர், பெண்களைத் தரக்குறைவாகப் பேசியதுதான் அருவருக்கத்தக்க அரசியல் என்று மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *