
மத்திய பாஜக அரசு தனது சித்தாந்தத்துக்கு எதிரான கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிர்வாகத்தில் தலையிட்டு பல்வேறு தொல்லைகளை ஏற்படுத்தி வருவதாக இந்திய அரசியல் பார்வையாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். தனக்கு எதிரான கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்குத் தொல்லைத் தருவதில் இன்றைய பாஜக அரசு மட்டுமல்ல, அதற்குமுன் இந்தியாவை ஆட்சிசெய்த காங்கிரஸ் கட்சியும் மாநில அரசுகளுக்கு பல தொல்லைகளைக் கொடுத்தது.
உலகிலேயே முதன்முறையாக தேர்தல்மூலம் கேரளாவில் கம்யூனிஸ்டுகள் 1956 ம் ஆண்டு ஆட்சி அமைத்தனர். அந்த ஆட்சி 365 ஆவது சட்டப்பிரிவை பயன்படுத்தி கலைக்கப்பட்டது. நாட்டிலேயே முதல்முறையாக கேரளாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் சித்தாதந்ததுக்கு எதிரான அரசை ஆட்சிக்கட்டிலிருந்து தூக்கியெறிந்தது காங்கிரஸ் கட்சி.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் சின்ன சின்ன காரணங்களாலும், தனிப்பட்ட பகை காரணமாகவும் திராவிடக் கட்சிகளின் மேல் ஆ த்திரம் கொண்டு அவர்களது ஆட்சிகள் பலமுறை கலைக்கப்பட்டுள்ளன.
ஒன்றியத்துக்கும், மாநிலங்களுக்கும் இடையிலான பஞ்சாயத்துகள் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட 1956 ம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் அதிகமாச்சு. மத்திய-மாநில அரசுகளுக்கிடையே உரசல் போக்கு கடந்த கால காங்கிரஸை விட தற்போதைய பாஜக அரசு, எதிர்க்கட்சிகளின் மாநில அரசுகளுக்குத் தொல்லை தருவது அதிகரித்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக பிரதமர், உள்துறை அமைச்சர் முதற்கொண்டு எல்லா அமைச்சர்களும் இரட்டை இன்ஜின் என்ற வார்த்தையை அடிக்கடி சொல்லி வருகிறார்கள்.
இதற்கு விளக்கத்தைத் தரும் மத்திய ஆட்சியாளர்கள், மத்தியில் ஆளும் கட்சியும், மாநிலத்தில் ஆளும் கட்சியும் ஒரே கட்சியாக இருந்தால் அந்த மாநிலத்துக்கு திட்டங்களும், நிதிப்பகிர்வும் தாமதமில்லாமல் கிடைக்கும், தங்களுக்கு சாதகமான மாநில அரசுகள் கேட்பதற்கு மேலாகவே அனைத்து வசதிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்கும் என சொல்கின்றனர். மத்திய அரசு இப்படி வெளிப்படையாக பேசுவது ஜனநாயகமற்ற செயல் இல்லையா .. இது மாநில மக்களை மிரட்டி தனக்குச் சாதகமாக வாக்குகளை பெற முயற்சிக்கும் செயல் இல்லையா என்றும் நியாயமான விமர்சனங்கள் எழுகின்றன.
இதுபோல் மத்திய அரசு தனது கருத்தை மாநில மக்கள்மீது திணிப்பது சர்வாதிகாரத்துக்கு வழி வகுக்கும் பாசிசம் என்று முற்போக்காளா்கள் சொல்லிவருகின்றனர். இப்படிப்பட்ட ஒரு மத்திய அரசை மிக வலிமையாக எதிர்த்துப் போரிடும் வல்லமை கொண்ட மேற்கு வங்க மாநில முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜி, தன் மாநிலத்துக்குள் மத்திய அரசின் நாட்டாமைத் தனத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஒடுக்கி வருகிறார். அதனால் நாடு முழுவதும் கவனத்தைப் பெற்று வரும் மம்தாவின் வீரியத்தைக் குறைக்க, அவரது கட்சிக்குள் பாஜகவினர் ஊடுறுவி சின்னா படுத்தி வருகின்றனர்.
மம்தாவால் வளர்க்கப்பட்டு அமைச்சர்களாக்கப்பட்ட பலர் அவருக்குத் துரோகம் செய்துவிட்டு பாஜகவில் கரைந்தனர். இதுமட்டுமல்ல, அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை, நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம், போன்ற மத்திய அரசு நிறுவனங்களை மம்தாவுக்கு எதிராக திருப்பிவிட்டு பாஜக தொடர்ந்து தொல்லை கொடுத்தாலும் மம்தா அசராமல் அதிரடியாக எதிர் தாக்குதலை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று நாடியா மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுப்பட்ட மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பாஜகவுடன் மறைமுக தொடர்பு வைச்சிருக்காங்க என்று யாரும் எதிர்பாராத குற்றச்சாட்டை முன் வைச்சிருக்காரு. அதாவது, இந்திய தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளைத் தமிழ்நாட்டுக்குத் தேர்தல் பார்வையாளர்களாக அனுப்பியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியிருக்கார்.
குறிப்பாக, மேற்கு வங்கத்தில் முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்த திறமையான போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டுத் தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மேற்கு வங்கத்தில் பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தியிருக்காரு. மேற்கு வங்க நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்புகளில் தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளை பாஜக அமர்த்துவதாக அவர் சொல்லியுள்ளார். மத்திய பாஜக அரசை மம்தாவைப்போலவே தமிழ்நாட்டு முதலமைச்சரும் எதிர்த்து வருகிறார்.
மம்தா அளவுக்கு நெருக்கடிகளை ஸ்டாலின் சந்திக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் தமிழ்நாட்டு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் இந்த தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் தான், திமுகவுக்கும், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும்தான் என்று தனது பிரச்சார கூட்டங்களில் ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ள நிலையில் மேற்கு வங்க அதிகாரிகள் 500க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்துக்கு மாற்றப்பட்டிருப்பது உண்மைதானா .?.. அப்படியே அதிகாரிகள் மாற்றப்பட்டிருந்தாலும் அது திமுகவுக்கு எந்த வகையில் உதவும்..?. மம்தாவால் பாராட்டப்படும் மேற்கு வங்கத்தின் திறமையான அதிகாரிகள், திமுகவுக்கு எப்படி உதவ முடியும் ?. என்ற பல கேள்விகள் எழுகின்றன.
தமிழக அரசியலில் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் மம்தாவின் இந்த திடீர் குற்றச்சாட்டு, எந்தளவுக்கு உண்மை என்பது போகபோகத்தான் தெரியவரும்.




